சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரைக்கு அருகில் வசிக்கும் 250 பூர்வகுடிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்படாமல் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் நடப்பது என்ன என்பது குறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
கூவம் ஆற்றின் கரையோரம் வீடுகள் கட்டப்பட்ட பகுதிகளுக்கு அருகே பந்தல்கள் போடப்பட்டு குடிசை மாற்று மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இப்பகுதியை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். பந்தலுக்கு அருகிலேயே அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு கொண்டிருந்தனர். அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வாகனங்களில் தங்கள் உடமைகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
வீட்டை காலி செய்து வாகனங்களில் தங்கள் உடமைகளை ஏற்றிக் கொண்டிருந்த மக்களிடம் பேசினோம், ’’ராதாகிருஷ்ண நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வசித்து வருகிறோம். கூவம் நதிக்கரைக்கு நெருக்கமாக இருக்கும் 93 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் இன்றே எங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு புளியந்தோப்புக்கு சென்று வருகிறோம்’’ என்றனர்
முதற்கட்டமாக இடிக்கப்பட உள்ள 100 வீடுகள்
2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு கூவம் நதிக்கரையோரம் இருக்கும் குடியிருப்புகளை அகற்றி, அங்குவசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு அரசு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் ராதகிருஷ்ணன் நகர் பகுதியில் வெள்ள பாதிப்புக்கு அதிகம் வாய்ப்புள்ள சுமார் 247 வீடுகளை அப்புறப்படுத்த போவதாக ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கூவம் ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் ஆற்றின் கரைக்கு நெருக்கமாக கட்டப்பட்டுள்ள 100 குடியிருப்புகளை மட்டுமே முதற்கட்டமாக இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது
எனவே கூவம் ஆற்றின் கரைக்கு மிக அருகில் இருக்கும் 100 குடும்பங்களில் 93 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கு மட்டும் இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர், அப்பகுதி மக்கள். இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் லட்சுமி அம்மாளிடம் கேட்டபோது,
‛‛கடந்த 35 வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள முகவரியின் அடிப்படையில்தான் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கி இருக்கிறோம். இந்த நிலையில் இன்னும் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளிடம் இந்த ஆவணங்களை காண்பித்து பேசியநிலையில் அவர்கள் உறுதியான பதிலை தர மறுப்பதாக,’’ கூறினார்.
ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அரசால் அப்புறப்படுத்தப்பட உள்ள சில வீடுகளின் உரிமையாளர்கள் வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள தங்களது வீடுகளை வாடகைவிட்டு உள்ளனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள், வேறு பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களுக்கு முறையாக வீடுகள் கிடைக்க ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களிடம் பணம் கேட்பதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துவிட்டு நம்மை கடந்து சென்றனர்.
இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்க திட்டம்?
மொத்தமாக அகற்றப்பட உள்ள 247 குடியிருப்புகளில் 93 குடும்பங்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள குடியிருப்புகளை இரண்டாம் கட்டமாக அகற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அகற்றப்பட உள்ள குடும்பங்களுக்கான குடியிருப்புகள் பெரும்பாக்கம் பகுதியில் ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.