தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும்,  உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை  தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


பின்னர்  ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.


இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும், விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.


 




மற்றொரு வழக்கு


திறந்து கிடந்த மழைநீர் வடிகால் கால்வையை மூட கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுகத்தாது மனித உரிமை மீறல் என தெரிவித்த மாநில மனித உரிமை ஆணையம், அந்த கால்வையை விரைந்து சீர் செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஆவடி நகராட்சியின் 18 வது வார்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், ஆறாவது பிளாக்கில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் மூடப்படாமல் உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் அதில் விழுந்து காயம் அடைவதாகும் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்,


அதில், தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு திரும்பி வரும் வழியில், திறந்து கிடந்த அந்த கால்வாயில் விழுந்து காயம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஆவடி மாநகராட்சி உதவி பொறியாளர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், மூடப்படாமல் இருக்கும் மழைநீர் வடிகால் கால்வாயை மூடக்கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காதது மனித உரிமை மீறல் எனக்கூறி,  மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், குறிப்பிட்ட அந்த கால்வாயை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.