சென்னை அருகே திருமணமான 7 மாதத்தில் வரதட்சணையாக கொடுத்த நகையை கணவர் அடமானம் வைத்ததால் மனமுடைந்த கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை அடுத்த போரூர் மதனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சேதுபதி . இவர் போரூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியான 25 வயதனா சசித்ரா தேவி எம்.காம் பட்டதாரி.


இந்தநிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றநிலையில், சீர்வரிசையாக பெண் வீட்டார் 25 பவுன் நகை மற்றும் கார் உள்ளிட்டவற்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்வரிசையாக கொடுத்த நகையிலிருந்து 10 பவுன் நகையை மனைவி சசித்ராதேவிக்கு தெரியாமல் சேதுபதி எடுத்து அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த நகை மாயமானது குறித்து சசித்ராதேவி கேட்டபோது, சேதுபதி நகையை அடகுவைத்ததாக கூறியதையடுத்து, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இந்த பிரச்சினை தொடர்பாக இருவீட்டாரும் சேர்ந்து தம்பதியை சமரசம் செய்து வைத்தனர். தற்போது 7 மாத கர்ப்பிணியாக சசித்ராதேவி உள்ள நிலையில், வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்னதாக 10 பவுன் நகையை மீட்டு விடுகிறேன் என்று சேதுபதி உறுதியளித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை சேதுபதி, சசித்ரா தேவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆவடி சிரஞ்சீவி நகர் முதல் குறுக்குத்தெருவில் வசிக்கும் மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், தாய் வீட்டுக்கு வந்த சசித்ரா தேவி தனியறையில் உறங்கினார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அவரது தாயார் கமலா எழுந்து பார்த்தபோது, சசித்ராதேவி மின்விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இதையடுத்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் சசித்ராதேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது. வரதட்சனையாக கொடுத்த நகையை கணவர் அடமானம் வைத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்கொலைக்கான காரணங்கள் : 


தொழில் சார்ந்த பிரச்சினைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 


மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 



  1. மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)

  2. தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)

  3. மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)

  4. மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)

  5. கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)


அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.


எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050