தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என நினைத்தால் பிரித்து விடுவோம் என பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னதாகப் பேசிய நிலையில், அவருக்கு கண்டனம் தெரிவித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.


'பாஜகவுக்கு தெரிந்தது பிரிப்பது’


“பாஜகவுக்குத் தெரிந்தது எல்லாம் பிரிப்பது மட்டும் தான், அப்படிப் பிரித்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலராது. அந்த வயிற்றெரிச்சல் தான் இப்படியெல்லாம் பேசச் சொல்கிறது” என ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.




ஆ.ராசா பேச்சு


முன்னதாக நாமக்கலில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, “அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" எனக் காட்டமாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பேசி இருந்தார்.


மேலும், ”எல்லா மாநிலங்களையும் சம அளவில் பார்க்கிறோம் என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார். நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரில் பேசவில்லை. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு , திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது” என்றும் ஆ.ராசா பேசி இருந்தார்.


ஆ.ராசாவின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் அவரது கருத்து பெரும் வாதங்களைக் கிளப்பியுள்ளது.


கொந்தளித்த நயினார் நாகேந்திரன்


இதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசைக் கண்டித்து பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நயினார் நாகேந்திரன், ”தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்.


ஆ. ராசா சொன்ன பிறகே எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எப்படி ஆந்திரா, தெலுங்கானா பிரிந்து இருக்கிறதோ. அதேபோன்று தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்.


எப்போதாவது வெற்றி பெறக்கூடிய திமுக இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு மூன்று காரியங்களை மட்டும் செய்து இருந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆகியிருப்பார்” எனப் பேசியிருந்தார்.


இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண