செங்கல்பட்டில் குரங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக புகார் எழுந்த நிலையில் அதற்கு வனத்துறை சார்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்டம்  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் குரங்குகள் வரத்து சமீபகாலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வெங்கடேசபுரம்,  ராவத்த நல்லூர், காந்தி நகர், அப்துல்கலாம் நகர், நேரு நகர், மேட்டு கிராமம் கஸ்தூரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பேரூராட்சிக்கும், வனத்துறைக்கும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்தனர்.





முதல் நாள் 3  கூண்டுகள் வைக்கப்பட்டதில், ஒரு கூண்டில் ஒரு குரங்கும் சிக்கவில்லை. 2 ஆவது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3 ஆவது கூண்டில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகளும் சிக்கின. 2 வது நாள் 26 குரங்குகள் பிடிப்பட்டன. இந்த நிலையில் ஒரே கூண்டில் 70க்கும் மேற்பட்ட குரங்குகளை வனத்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், அதற்கு விலங்கு ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதற்கு வனத்துறை தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 




வனத்துறை விளக்கம்


அந்த விளக்கத்தில், குரங்குகள் குடும்பமாக வாழும். அவை எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும். கிட்டத்தட்ட 70 குரங்குகள் ஒரே குடும்பமாக வசிக்கும். நாங்கள் வைத்த கூண்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குரங்குகள் சிக்குவது உண்டு. அந்த வகையில்தான் தற்போதும் குரங்குகள் சிக்கியுள்ளன. சித்ரவதை செய்யவில்லை. கூண்டில் பிடிப்பட்ட குரங்குகள் வேறொரு கூண்டில் மாற்றப்பட்டு அனைத்தும் வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.