சென்னையில், மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகள், ரயிலில் பயணிக்கவும், தங்கள் வாகனங்களை நிறுத்தவும், மாதாந்திர அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி முதல், மாதாந்திர அட்டைகள் வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கான தேவை அதிகரிதது வருவதை கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் வாகனங்களை நிறுத்துவதற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படும். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் மாதாந்திர அட்டை பெற்றவர்கள், அதன் காலம் முடியும் வரை பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியை பயன்படுத்தி, மெட்ரோ நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயண அட்டை விற்பனை, ரீசார்ஜ் வசதி நிறுத்தம்

சென்னையில், மெட்ரோ ரயிலை பயன்படுத்திவரும் பயணிகள் அனைவரும், தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிங்கார சென்னை அட்டைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில், மெட்ரோ நிறுவனம் முழுமையாக அதற்கு மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ பயண அட்டை விற்பனை நிறுத்தப்படுவதுடன், 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக மெட்ரோ பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதியும் நிறுத்தப்பட உள்ளது. அதில், முதற்கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, நந்தனம், சின்னமலை, OTA-நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்பாக்கம், செனாய் நகர் ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் மெட்ரோ பயண அட்டை விற்பனை மற்றும் ரீசார்ஜ் வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சிங்கார சென்னை அட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

மேற்கூறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தாங்கள் வைத்துள்ள பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் பயன்படுத்திவிட்டு, இனிமேல் பயணத்தை தொடர, சிங்கார சென்னை அட்டை எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டையை வாங்கி பயன்படுத்துமாறு, சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.