Singaperumal Koil Bridge Opening Date: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில், பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 

தென் தமிழகத்தையும் சென்னையும் இணைக்கக்கூடிய சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. ஜிஎஸ்டி சாலை என அழைக்கக்கூடிய இந்த சாலையில் பெருங்களத்தூரில், இருந்து செங்கல்பட்டு வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர்ந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

சிங்கப்பெருமாள் கோவில் பாலம் - Singaperumal Koil Rotary Flyover

அதன் ஒரு பகுதியாக தான் செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோயில் அருகே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது‌. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தப் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். 

ஆனால் 2021 வரை எந்த வித பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது. புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு மீண்டும் இந்த பணிகளை துவங்க முடிவு செய்தது. சுமார் 138 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக சிங்கப்பெருமாள் கோயில் இருந்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில்- ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கனரக வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோயில் வழியாகவே இந்த சாலையை அடைய முடியும் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

பொதுமக்கள் அவதி

குறிப்பாக இந்த சாலைக்கு ஜிஎஸ்டி சாலையிலிருந்து, செல்ல வேண்டும் என்றால், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் தினமும் 30 முறைக்கு மேல், ரயில்கள் செல்வதற்காக மூடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் போடுவதால் ஒரகடம் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

சிங்கப்பெருமாள் கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் உள்ளூர் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்தப் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பத்தில் வேகமாக நடைபெற்றாலும், தற்போது மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் கட்டி முடிக்கப்பட்ட பாலம்

தற்போது திருச்சி- சென்னை மார்க்கமாக உள்ள பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தப் பகுதியில் இருந்து, ஒரகடம் செல்வதற்கான பாலத்தின் வழியும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை -திருச்சி மார்க்கமாக உள்ள பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒருபுறம் பணிகள் முடிவடைந்து, இருப்பதால் பணிகள் முடிவடைந்த பாலத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

திறப்பு விழா எப்போது ? Singaperumal Koil Bridge Opening Date 

இந்தநிலையில் தற்போது ஒருபுறம் பாலம் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒருபுறம் பாலம் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில், இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் பாலத்தை திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் திறக்கப்பட்டால், 20 ஆண்டுகால தலைவலிக்கு தீர்வாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.