தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் தவிர பிற சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த இரவு நேர ஊரடங்கைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் இந்த இரவு நேர ஊரடங்கின்போது சாலைகள் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அவ்வாறு அமைக்கப்பட்டு வரும் சாலைகள் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை, மந்தைவெளியில் உள்ள வாரன்ட் சாலையில் நடைபெற்று வந்த சாலைகள் அமைக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியும் உடனிருந்தார். அவர்களிடம் சாலைகள் அமைக்கும் பணி பற்றியும், பழைய சாலைகள் அகற்றப்பட்டு முற்றிலும் புதியதாக சாலைகள் அமைக்கப்படுவது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.
அதிகாரிகளும் சாலைகள் முன்பிருந்த உயரத்தையும், அந்த சாலைகள் அகற்றப்பட்டு புதிய சாலைகள் அமைப்பதற்காக தற்போதுள்ள உயரத்தையும் அளவுகோல்களால் அளந்து பணிகளை விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது பிரச்சிகனைகளையும் நேரில் கேட்டறிந்தார்.
மாநிலத்தில் நடைபெற்று வரும் பல பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளை தொடர்ந்து நான்கு நாட்களாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எல்லாம் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.
மேலும் படிக்க : காணும் பொங்கலில் காண வேண்டியது உறவினர்கள்தானே தவிர கொரோனாவை அல்ல - ஆளுநர் தமிழிசை
மேலும் படிக்க : கரூர் ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்