சென்னை பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூட இந்த கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று சுமார் 80க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென்று தாக்கி கொண்டார்கள். கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த மோதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குள் நடைபெற்ற இந்த மோதலில் கற்களைக் கொண்டு மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் பலருக்கு ரத்த காயம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் இதுதொடர்பாக தெரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
அந்த கல்லூரியின் நுழைவு வாயிலில் துவங்கிய இந்த தாக்குதலானது கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிற்கு தாக்கிக் கொண்டே சென்றனர். சக மாணவர்கள் இரண்டு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது. அப்பகுதி பொதுமக்களும் மாணவர்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில், பகலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இடையே முகசூழிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மாணவர்களுக்கிடையே இரு பிரிவினருக்குள் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளதாகவும், மாணவர்களின் சண்டை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்