குழந்தைகளுக்கு நிகரான செல்வம் எதுவுமில்லை என்பது போல, அந்த குழந்தைகள் சிறு வயதில் நமக்களிக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. அப்படியான குழந்தைகள் கொண்டாடும் தினமாக தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி “தேசிய குழந்தைகள் தினம்” கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 


இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நேரு தெரிவித்தார். ஜவஹர்லால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். அவரை குழந்தைகள் அனைவரும் ‘சாச்சா நேரு’ (மாமா நேரு) என அழைக்கிறார்கள். நேரு குழந்தைகளை இந்த நாட்டின் சொத்தாக நினைத்தார். அவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவர். 1956 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் படி  நவம்பர் 20 ஆம் தேதி தான் “உலக குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. ஆனால் 1964 ஆம் ஆண்டு பண்டிட் ஜவஹர்லால் நேரு மறைவுக்குப் பின் அப்போதைய அரசு அவரது பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று  குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 




இன்றைய நாளில் குழந்தைகளின் சிறப்பு பண்புகளையும், திறமையையும் நாம் போற்றிட வேண்டும். இன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவதோடு, இனிப்புகள் வழங்கி இன்றைய நாள் சிறப்பிக்கப்படும். பெற்றோர்களும் இந்நாளில் உறுதியொன்றை எடுக்க வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது விருப்பத்தை திணிக்காமல் அவர்கள் விரும்பும் கல்வியை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை தீபாவளி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகள் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் குழந்தைகள் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. 


 


கொரோனாவில்  பெற்றோர்களை இழந்த குழந்தைகளுடன் தேசிய குழந்தைகள் தினத்தை கேட் வெட்டி மாவட்ட ஆட்சியர் கொண்டாடினார்.

 

இந்தநிலையில் , செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த  குழந்தைகளுடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இராகுல் நாத்  குழந்தைகள் தினத்தை கொண்டாடினார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,மாவட்ட குழந்தை பாதுகாப்பு  அலகு மூலம் கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த 14 குழந்தைகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் தேசிய குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார். அதனை தொடர்ந்து தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்காக நடைப்பெற்ற ஒவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ,மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பதங்கங்கள் மற்றும்  கேடங்களை வழங்கினார்.



 

மேலும் , தேசிய குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில்  மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் அறிவுடை நம்பி, மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார்,வட்டாட்சியர் தனலட்சுமி,வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்,குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.