சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள  முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு   தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு பிறகு காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகைப் புரிந்த அவர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு   மரியாதை செலுத்தி பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாவின் நினைவை போற்றும் புகைப்படங்களை கண்டு மகிழ்ந்தார். 



மேலும் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் விருந்தினர்கள் குறிப்பேட்டில் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுதியதாவது, மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவரிடமிருந்து  கற்றுக் கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் ( இது பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரை ). அவர்கள் வகுத்து தந்த பாதையில் தற்போதைய திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி பீடு நடைபோடும் என்பதை உறுதி ஏற்கிறேன் என பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். 



 

பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ,  பேரறிஞர் அண்ணா  காட்டிய அறிவுரைப்படி இந்த ஆட்சி வீறுநடை போடும் என்று உறுதியோடு நான் தெரிவித்திருக்கிறேன்.அண்ணாவின் பெயர் மீண்டும் அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் தமிழக அரசு சார்பில் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற இருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திட்டங்கள் அறிவிக்கின்ற பொழுது அது உங்களுக்கே தெரியும் என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.



மேலும் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் எங்களுக்கு அரசியல் ஆசானாக விளங்கினார். அவரின் வழி படி நடப்போம் என தெரிவித்தார். மேலும் வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணாவின் பெயரில் இன்னும் பல நல்ல திட்டங்கள் மக்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

 



தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு காஞ்சிபுரத்திற்கு முதல்முறையாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்த காரணத்தினால் இன்று காலை முதலே அவரை காண்பதற்காக திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு முன்பு குவிந்திருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்குமாறு அறிவுறுத்தல் கொடுத்தனர். தமிழக முதலமைச்சர் காஞ்சிபுரம் வருகையையொட்டி காஞ்சிபுரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை  பகுதியில்  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட  ஹூண்டாய் கார் தொழிற்சாலையில்  ஒரு கோடி உற்பத்தியை உறுதி செய்யும் வாகனம்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிடப்படும் நிகழ்வுக்காக செல்ல இருக்கிறார்.



இந்நிகழ்வில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் சி.வி.எம்.பி எழிலரசன், சுந்தர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான உடனிருந்தனர்.