சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட பேருந்து முனையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிளம்பாக்கத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேருந்து நிலைய நுழைவாயிலில் உள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்த பின் பேட்டரி வாகனத்தில் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார். இதனையடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகள், மாநகர போக்குவரத்து பேருந்துகள் என முதற்கட்டமாக 10 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, பேருந்தில் பயணித்த பயணிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு டாட்டா காட்டியவாறு உற்சாகமாக சென்றனர்.
ரூ.140 கோடி செலவில் ஸ்கைவாக்:
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக 30 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்தது. 70 சதவீத பணிவுகள் இந்த ஆட்சியில் முடிக்கப்பட்டது. சிறு மழை பெய்தாலே குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. அதனை 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டது. எட்டு கிலோ மீட்டர் அளவிற்கு முழுமையான சாலை அமைக்கப்பட்டது. ஆறு ஏக்க நிலப்பரப்பில் ரூபாய் 11 கோடி ரூபாய் செலவில் அழகிய பூங்கா அதேபோல் 16 ஏக்கர் நிலவரத்தில் 13 கோடி காலநிலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையாக இந்த பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பயணிகள் பயணிப்பார்கள். 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்கைவாக் பணி நடைபெற உள்ளது” என தெரிவித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைத்தார். இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:
- 6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
- சென்னைமற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.
- 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன
- கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.
- கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
- 2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்
- இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
- தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
- முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது