தந்தை திட்டிய கோவத்தில் பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இளைஞரால் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் 4 பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளுடன் சுற்றி வருவதாகவும், அவர்கள் சிறிது நேரத்தில் ரயில் நிலையத்தை வெடிகுண்டு மூலம் வெடிக்க வைக்க இருப்பதாகவும் இளைஞர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையை போனில் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவல்துறை அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் செம்பியம் காவல் துறையினர், வெடிக் குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் களுடன் விரைந்து பெரம்பூர் ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்த தொடங்கினர். மேலும், பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் சோதனை நடத்திய அனைவரும் பொய் தகவல்கள் என திரும்ப சென்றனர். இதையடுத்து, போன் மூலம் கிடைத்த தகவல் அனைத்தும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அழைப்பு விடுத்த நபர் யார் என்பது குறித்து செம்பியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மிரட்டல் விடுத்தது அம்பத்தூரைச் சேர்ந்த 24 வயதான பிரவீன் என்பது தெரியவந்தது. உடனடியாக பிரவீன் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரைப் பிடித்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் தெரிந்தார். மேலும், பிரவீன் தன்னை யாரோ துரத்துவதுபோல் தானே கற்பனை செய்துகொண்டு தனது பெற்றோரிடம் தொடர்ந்து முறையிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினமும் அதேபோல தனது தந்தை யிடம் தன்னை 4 பேர் கத்தியுடன் துரத்துவதாகக் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவரது தந்தை பிரவீனை திட்டியுள்ளார். இதனையடுத்து தந்தை திட்டிய கோவத்தில் பிரவீன் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தவறான தகவல் கொடுத்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து பிரவீனின் பெற்றோரை அழைத்து வந்த காவல்துறையினர் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.