தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநிலத்திலே அதிக மக்கள் வாழும் நகரமாக உள்ளது. பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என்று போக்குவரத்திற்கு பல வழிகள் இருந்தும் பீக் ஹவர் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து மிக கடும் நெரிசலாகவே இருக்கிறது.
சென்னையில் நீர்வழிப்போக்குவரத்து:
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம், கூடுதல் மெட்ரோ வழித்தடங்கள் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தரை வழி மட்டுமின்றி நீர்வழிப்போக்குவரத்தையும் சென்னையில் அறிமுகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
1950 காலகட்டத்தில் சென்னையில் கூவம் நதியில் படகுப்போக்குவரத்து படு ஜோராக நடந்து வந்தது. தற்போது கூவம் நதி அதற்கான அடையாளமே இல்லாமல் சிதைந்து விட்டது. கூவம், அடையாறு ஆகிய நதிகள் சென்னையில் பாய்ந்து வருகிறது.
வாட்டர் மெட்ரோ திட்டம்:
இந்த நதிகளை அகலப்படுத்தியும், தூய்மைப்படுத்தியம் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்க வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை இந்த நீர்வழிப் பாேக்குவரத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக படகு நிலையங்கள், படகு போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த நீர்வழிப் போக்குவரத்து சுமார் 15 முதல் 20 கி.மீட்டருக்கு முதற்கட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். அடையாறு நதியை இதற்காக பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், கூவம் நதி பல இடங்களில் நீரோட்டம் குறைவாகவும், படகு போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாமல் இருப்பதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
திட்ட அறிக்கை தயார்:
கூவம் நதியை காட்டிலும் அடையாறு ஆறு மாசு குறைவாகவும், சற்று விரிவாகவும் காணப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் இதை மேலும் பல கி.மீட்டருக்கு நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சாதாரண பயணிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் இந்த திட்டம் கவரும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலம் அரசின் வருவாய் அதிகரிப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள கொச்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வாட்டர் மெட்ரோ சேவையை மாதிரியாக கொண்டு இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.