தமிழ்நாட்டில் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை மிக முக்கிய நகரமாக இந்திய அளவில் இருந்து வருகிறது. சென்னையை பொருத்தவரை பொது போக்குவரத்து வசதிகளில், சிறந்த நகரமாகவும் இருந்து வருகிறது.
மாநகர பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ஆகியவை சென்னை மாநகரத்தில் மிக முக்கிய பொது போக்குவரத்து அம்சமாக இருந்து வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், அதிகளவு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சென்னை மாநகரத்திற்கு வந்த புதிய பேருந்துகள்
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் தரும் வகையில், தாழ்தள பேருந்துகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த பேருந்துகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதேபோன்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் கூடுதலான மின்சார பேருந்துகளை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் அடையாளம்
ஒரு காலகட்டத்தில் சென்னையின் அடையாளமாக இரட்டை அடுக்கு பேருந்துகள் செயல்பட்டு வந்தன. சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் வார நாட்களில், வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவு பயன்படுத்தும் பேருந்தாக இருந்தது. அதுவே, வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கு தளங்களுக்கு அதிகளவு மக்கள் செல்லக்கூடிய பேருந்து ஆகவும் இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் செயல்பட்டு வந்தன.
1980-ல் தொடங்கிய இந்தப் பேருந்து சேவைகள் 2008 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள், பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
"மீண்டும் வரும் இரட்டை அடுக்கு பேருந்துகள்" - Double Decker Bus
சென்னைக்கு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் சார்பில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை போக்குவரத்து கழகம் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகளை, செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது. இதன்மூலம் 17 ஆண்டுகள் கழித்து சென்னைக்கு இரட்டை அடுக்கு பேருந்துகள், செயல்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ், 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் சென்னை மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேருந்துகள் வார நாட்களில் அண்ணா சாலை, காமராஜர் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய வழித்தடங்களில் பயன்படுத்த மாநகர போக்குவரத்து கழக முடிவு செய்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இரட்டை அடுக்கு பேருந்துகளை, பொழுதுபோக்கு சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
பொலிவு பெற உள்ள சென்னை சாலைகள்
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மின்சார பேருந்துகளில், 90 நபர்கள் அமர்ந்து செல்லும் வகையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட உள்ளன. பேருந்து பராமரிப்பை தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
கட்டண நிர்ணயம் உள்ளிட்டவற்றை மாநகரப் போக்குவரத்து கழகம் நிர்ணயிக்கவுள்ளது. கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்து சென்னையில் 'டபுள் டக்கர்' பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.