சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து பல வகையான பாம்புகளை கடத்தி வந்த பெண் ஒருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். 


பாம்புகளுடன் வந்த பெண்மணி:


பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் சென்னை விமான நிலையத்திற் வருகை தந்த பெண் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 


 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து  நேற்று சென்னை விமான நிலையம் வந்த பெண்மணி ஒருவரிடம் சுங்கத்துரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அவரது உடைமைகளை சோதனை நடத்தினர். 






கைது:


அப்போது ஒரு பச்சோந்தி மற்றும் 22 பாம்புகளை அந்தப் பெண்  வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு வகையான பாம்புகளை அவர் எடுத்து வந்துள்ளார்.  அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்தனர். பின்னர், அவரை சனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, தங்கம் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது.


கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வனவிலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன. 


நாளுக்கு நாள் புது புது விதமான நவீன முறையில் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டைவிட 2022ஆம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டது கவலையை ஏற்படுத்தியது.


...............


கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை, சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 94.22 கோடி ரூபாய் மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


தங்கம் கடத்தல் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்கள் கைது செய்யப்பட்டனர். துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அதிகமாக கடத்தி வரப்படுகிறது. 


பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் தங்கத்தை மறைத்து வைத்தும், தங்க ஸ்பேனர்கள், டூல்ஸ் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வருவது, தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வருவது என நூதன முறையில் கடத்தி வரும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்திருக்கின்றன.


அதேபோல், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 10 கோடியே 97 லட்சம் ரூபாய் அமெரிக்க டாலர், யூரோ கரன்சி, சவூதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


இது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவங்களில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை மட்டும் இன்றி, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் தங்க கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க, தொடர் நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் வாசிக்க..


May day wishes: தொழிலாளர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!


Labour Day History: உழைக்கும் வர்க்கத்தை போற்றும் நாள்..! தொழிலாளர் தினம் பிறந்த வரலாறு தெரியுமா..?