உலகம் முழுவதும் நாளை (மே 1) தொழிலாளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொழிலாளர்களுக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ”உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்த பொன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாக திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர் நலன் காக்க திராவிட முன்னேற்ற கழகமும் அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என்பதை இந்த நன்நாளில் தெரிவித்து உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.


எடப்பாடி பழனிசாமி -அதிமுக: "உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள். உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின நாளாகும்" என்று தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


முத்தரசன் -சிபிஐ: "தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை. தமிழக தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் எடுத்துக் கூறி களம் இறங்கின. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம். வகுப்புவாத, மதவெறி பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும் மே தின நாளில் சூளுரை ஏற்று, களப்பணி தொடர்வோம்" 


கே.பாலகிருஷ்ணன் -சிபிஎம்: "அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்ட, சமத்துவச் சமூகத்தை உருவாக்கிட மே தினத்தில் உறுதியேற்போம். சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமைப்பாட்டை வளர்த்தெடுப்போம். தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க தொய்வின்றி போராடுவோம். மாநில உரிமைகளை, கூட்டாட்சியைப் பாதுகாப்போம், இந்தியாவில் பன்முக பண்பாட்டை உறுதிசெய்வோம். பரந்துப்பட்ட உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம். நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப்பிடித்த மே தின கொடியை கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்" 


வைகோ -மதிமுக: "மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகம் எங்கும் துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்று சிந்தனை சிற்பி சிங்காரவேலனார், 1923, மே 1 பொதுக்கூட்டத்தில் முழங்கினார். தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்" 


கே.எஸ்.அழகிரி -காங்கிரஸ்: "பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என  கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


கமல்ஹாசன் -மநீம: "காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்' என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள்" என்று அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.