சென்னை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் மீனகம் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்று நோய் பரவியதால், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏழு விலங்கு இருப்பிடங்கள் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டன. ஏழு மூடிய இருப்பிடங்களில் ஆறு இருப்பிடங்கள் தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொன்றாக குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் இல்லம், பாம்புகள் இருப்பிடம், உட்சென்றுகாணும் பறவைக் கூடம், வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியவை பார்வையாளர்களுக்காக 2022 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டுள்ளன. 



 

சிங்கம் மற்றும் மான் சஃபாரி திறப்பு விரைவில் அறிவிக்கப்படும். ரூ.23.00 லட்சம் மதிப்பிலான செலவில் மீனகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய தொட்டிகளுடன் முழு அளவிலான அமைப்புகளுடன் கூடிய மீனகத்தை இன்று பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இவ்விருப்பிடத்தில் 28 வகையான அலங்கார மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பார்வையாளர்கள் மீனகத்துக்கு வருகைதந்து வண்ணமயமான மீன்களைக் கண்டகளிக்குமாறு பூங்கா நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



 

வண்டலூர் உயிரியல் பூங்கா

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 

 



 

வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையின் புறநகர் பகுதி என்பதால் அதிக அளவு பொதுமக்கள் வார இறுதி நாட்களில் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.