தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், மருத்துவ படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த உத்தரவை எதிர்த்து  நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது. 

 

நிகர் நிலை பல்கலைகழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகள்  தரப்பில், அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிர்ப்பந்திக்க முடியும் என கேள்வி எழுப்பின. ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என வாதிடப்பட்டது. 

 

50சதவீதம் மாணவர்களிடம் 50சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் விரும்பினால், தனியார் கல்லூரிகளுக்கு மானியம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில்,  தனியார் மருத்துவ கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக்  கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும்,   தனியார் கல்லூரிகளை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

 

நிபுணர் குழுவை நியமித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, 50சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்தனர்.

 

தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

 

அதேசமயம், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், தகுதி வாய்ந்த மாணவர்களால் சேர்க்கை பெற முடியாது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

 

50 சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யும் வரை தற்போதைய நடைமுறையை பின்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.