சென்னை மாநகரின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கு இடிக்கப்பட்ட நிலையில், அங்கு வானளாவிய கட்டிடம் ஒன்று வர உள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
உதயம் திரையரங்கு உதயமான வரலாறு
சென்னையின் அசோக் நகரின் முக்கிய அடையாளமாக விளங்கிய உதயம் திரையரங்கு, அசோக் பில்லர் அருகே, 1983-ல் உதயமானது. முதலில், உதயம், சூரியன், சந்திரன் என மூன்று தியேட்டர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வந்தது. பின்னர் நான்காவதாக மினி உதயம் தியேட்டரும் திறக்கப்பட்டது. அங்கு முதல் படமாக, ரஜினிகாந்த் நடித்த சிவப்பு சூரியன் திரையிடப்பட்டது.
வெற்றிகரமான மல்டிபிளக்ஸ் திரையரங்காக இயங்கி வந்த உதயம் திரை வளாகத்தில், பல முன்னணி நட்சத்திரங்களின் ஏராளமான வெற்றிப் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல திரைப்படங்களிலும் இந்த உதயம் திரையரங்கு தோன்றியுள்ளது. குறிப்பாக, அஜித்தின் ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில், அஜித்தின் முதல் பாடலாக, ‘உதயம் தியேட்டரிலே என் இதயத்த தொலைச்சேன்‘ என்ற பாடல் இடம்பெற்றது.
இப்படி, திரைப்பட ரசிகர்களின் ப்ரியமான தியேட்டர்களில் ஒன்றாக இருந்த உதயம் வளாகத்தை, காலத்துக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்காமல், அப்படியே நடத்தி வந்தனர். இதனால், நாளுக்கு நாள் ரசிகர்களின் வருகை குறைந்தது.
ஜனவரி மாதத்தில் மூடப்பட்ட உதயம் திரையரங்கு
ஒரு காலகட்டத்தில், தியேட்டர் இயங்குகிறதா இல்லையா என்று சந்தேகிக்கும் அளவிற்கு ரசிகர்கள் குறைந்ததால், வேறு வழியின்றி, தியேட்டரை விற்பனை செய்ய, அதன் உரிமையாளர் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே திரையரங்கு மூடப்படுவதாக தகவல் வெளியானது. அதன் பின்னர், சில மாதங்கள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, ஜனவரி மாதத்தில் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. அங்கு கடைசியாக திரையிடப்பட்ட படம் புஷ்பா 2.
உதயம் திரையரங்கு மூடப்பட்டது, சென்னையில் திரைப்பட ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் சோகமான ஒரு விஷயம்தான். தங்களுக்கு பிடித்த திரையரங்கு மூடப்பட்டதால், பல ரசிகர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், தற்போது அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு, அப்பகுதி தரைமட்டமாக காட்சியளிக்கிறது.
உதயம் திரையரங்கு இருந்த இடத்தில் வரவிருக்கும் வானளாவிய கட்டிடம்
உதயம் தியேட்டரை விலைக்கு வாங்கியது வேறு யாருமல்ல, சென்னையில் உள்ள பிரபல கட்டிட நிறுவனமான காசாகிராண்ட் தான். தற்போது அந்த பகுதியில், அலுவலகம் மற்றும் வீடுகளின் தேவை அதிகம் இருப்பதால், அங்கு 25 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்ட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதில், அலுவலகங்கள், வணிக வளாகம் மற்றும் வீடுகள் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்டிடத்தில் திரையரங்குகளும் வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஏற்கனவே, உதயம் தியேட்டர் இருந்ததால், அந்த இடம் சென்னையின் ஒரு அடையாளமாக விளங்கியது. தற்போது வந்திருக்கும் தகவலின்படி, அங்கு 25 மாடிகள் கொண்ட கட்டிடம் வந்தால், அதுவும் ஒரு அடையாளமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.