சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் கடந்த 7ம் தேதி அறை எண் 102ல் இருந்து துர்நாற்றம் வீசுவதாக லாட்ஜ் ஊழியர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்பவ விரைந்து வந்து அறையை உடைத்து உள்ளே பார்த்த போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதும், அவர்கள் எழுதி வைத்த கடிதத்தையும் கண்டெடுத்தனர்.
வழக்கில் ஏற்பட்ட திருப்பம்:
இதுகுறித்து வங்காள மொழியில் அவர்கள் எழுதிய கடிதத்தில், “எங்களை சேர விடாமல் தடுத்தவர்கள், இனியாவது சந்தோஷமாக இருக்கட்டும். நாங்கள் விண்ணுலகில் சந்தோஷ மாக வாழ்வோம்” என்று எழுதி இருந்தனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர்கள் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டம் ராதா நகரை சேர்ந்த 23 வயதான பிரசஞ்சித் கோஷ், பங்குரா மாவட்டம் பிஷ்ணு பூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான அர்பிதா பால் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போனதாக ஓட்டல் ஊழியர்கள் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த தகவல் திருவல்லிக்கேணி காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் தகவல்களை பெற்று ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் ஹோட்டலில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் என்றும், அர்பிதா பால் பிஆர்ஓ வாகவும், பிரசஞ்சித் சர்வராகவும் அந்த ஓட்டலில் பணிபுரிந்து வந்தபோது இருவரும் காதலித்துள்ளனர்.
தற்கொலை காரணம் :
கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரசஞ்சித் தங்களது திருமணத்திற்கு சொந்த ஊரான மேற்குவங்கத்திற்கு சென்று கடந்த 3ம் தேதி மாலை ரயில் மூலமாக சென்னை வந்துள்ளார். அவரை அழைப்பதற்காக அர்பிதா பால் ரயில் நிலையம் சென்றுள்ளார். அதன் பிறகு ஹோட்டலுக்கு அவர் வரவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், ஹோட்டலில் சர்வராக பணிபுரியும் அசாமைச் சேர்ந்த தர்மா என்பவர் காதலர்கள் சடலங்கள் கண்டெடுக்கப் பட்ட அன்று ஹோட்டலில் திடீரென தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் தலைமறைவான தர்மாவின் நண்பர்களான ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ்குமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இருவரின் செல்போனையும் பறிமுதல் செய்து சோதனை செய்தபோது, அதில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தற்கொலை செய்துகொண்ட அர்பிதா பாலை மிரட்டி நிதிஷ் குமார், ராஜா, தர்மா ஆகிய மூவரும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் அனுமதி வாங்க, அர்பிதா பாலின் காதலர் பிரசஞ்சித் கோஷ் மேற்குவங்கம் சென்றதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட நிதிஷ்குமார், ராஜா மற்றும் தர்மா ஆகியோர் நள்ளிரவு நேரங்களில் அர்பிதா பால் தங்கியருக்கும் விடுதிக்கு சென்று அவரை உல்லாசத்துக்கு அழைத்தும், போன் மூலமாக அவரை மிரட்டியும் வந்துள்ளனர். மேலும், அவர்கள் பிரசஞ்சித் கோஷுடன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் பயம் மற்றும் மன உளைச்சலில் இருந்த அர்பிதா பால் கடந்த 3ம் தேதி மாலை மேற்குவங்கத்தில் இருந்து வந்த அவரது காதலர் பிரசஞ்சித் கோஷுடன் திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்- மனைவி எனக் கூறி அறை எடுத்து தங்கி உள்ளார். பின்பு கடிதம் எழுதி வைத்து இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து, காதலர்களை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களான நிதிஷ்குமார், ராஜா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தர்மா என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.