இந்தாண்டு தொடங்கியதில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் நிலநடுக்கம்:


இரண்டே நாள்களில் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 49,000 பேர் இறப்புக்கு காரணமாக அமைந்தது துருக்கி - சிரியா நிலநடுக்கம். இதையடுத்து, இந்தோனேசிய தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவாகியது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் சில பகுதிகளில் கடந்த சில நாள்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், சென்னை அண்ணா சாலை அருகே ஓயிட்ஸ் ரோட்டில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதாகவும் அதனால் அங்கிருந்து ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்தில் வெளியேறியுள்ளனர். காலை 10 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது.


சென்னையில் நில அதிர்வா?


இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சில பகுதிகள் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு தகவல் பரவியது. அது என்னவென்றால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது.


இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சென்னையில் உண்மையாக நில அதிர்வு உணரப்பட்டதா, அதற்கு காரணம் மெட்ரோ பணிகளா என விசாரிக்க தொடங்கினோம்.


தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறுவது என்ன?


பொதுவாக, இந்தியாவில் நிலநடுக்கமோ நில அதிர்வோ ஏற்படும் பட்சத்தில், அதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம்தான் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம். இந்தியாவின் எந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது தொடர்பான தகவல்களை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின் மூலம்தான் உறுதி செய்ய வேண்டும்.


இதனால், சென்னை நில அதிர்வு தொடர்பாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் ஏதேனும் தகவல் வெளியிட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரித்தோம். ஆனால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் இது தொடர்பான எந்த செய்தியும் வெளியிடவில்லை.


சென்னை வானிலை மையம் கூறியது என்ன?


நில அதிர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தகவல் எதுவும் வெளியிடவில்லை. சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டால் அங்கு பொருத்தப்பட்டுள்ள ரிக்டர் அளவுகோலில் பதிவாகும். ஆனால், இன்று எந்த விதமான நில அதிர்வும் அங்கு பதிவாகவில்லை என கூறப்படுகிறது.


மெட்ரோ பணிகள் காரணமா?


நில அதிர்வு போன்ற தாக்கத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணம் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.