தொடர் விடுமுறை

 

தமிழ்நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறை இருந்து வந்தது. செப்டம்பர் 28-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் விடுமுறை இருந்ததால் பல நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டது. அதேபோன்று பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டதால், சென்னையில் தங்கி வேலை பார்க்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கினர்.

 

இதன் காரணமாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் சென்னை புறநகர் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதன் காரணமாக பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது . 



 

கடும் போக்குவரத்து நெரிசல் 

 

இந்நிலையில் நேற்று மாலை முதலே மீண்டும் சென்னையை நோக்கி சொந்த ஊருக்கு திரும்பினர். இதனை முன்னிட்டு பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை நோக்கி பொதுமக்கள் படையெடுத்த துவங்கியதால் பல இடங்களில் கடமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதியாக உள்ள தாம்பரம், பெருங்களத்தூர் ,கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் நேற்று மாலை முதல் விடியற்காலை வரை சிக்கி தவித்து வந்தது.

 

கடும் அவதி 

 

திருச்சி, மதுரை, கோவை என சொந்த ஊர்களில் இருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுத்து வந்ததால் உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலை ஒருபுறம் போக்குவரத்து நெரிசலால் கடுமையாக சிக்கி தவித்து வந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனையூரில் இருந்து அக்கறை சந்திப்பு வரை நீண்ட தூரத்திற்கு சாலைகளில் வாகனம் காத்து இருந்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சாலையில் எறும்பு போன்று ஊர்ந்து சென்றன. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனெடுத்து படிப்படியாக போக்குவரத்து நெரிசல் ஆனது விடியற்காலை முதல் குறைந்து வருகிறது.



 

தாம்பரத்திற்கு தொடரும் தலைவலி

 

ஆனால் தாம்பரம் பகுதியில் மட்டும் காலை 7:00 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இருந்து நள்ளிரவில் கிளம்பிய ஆம்னி பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவை ஜிஎஸ்டி சாலை வழியாக தாம்பரம் உள்ளே வந்திருப்பதால் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கின்றன. பிற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து இருந்தாலும் , தாம்பரம் பகுதி முழுமையாக போக்குவரத்து நெரிசலால் சிக்கி வருகின்ற தவித்து வருகிறது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்துள்ளனர். இன்று வேலை நாள் என்பதால் சென்னை புறநகரில் இருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் கூட்டமும் இன்னும் சற்று நேரத்தில் வரும் என்பதால் தாம்பரம் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது .