தி நகரின், பனகல் பார்க் மற்றும் வி.என்.சாலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது.


தி நகரில் மெட்ரோ:


சென்னையில் மெட்ரோ ரயில் 2-வது திட்டப் பணிகள் 3 வழித்தடங்களில்  பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரெயில் பணியால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்கள் இடையூறு இல்லாமல் மெட்ரோ பணிகளை விரைவாக செய்ய மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. தியாகராயநகர் பனகல் பூங்கா-நந்தனம் சிக்னல் இடையே மெட்ரோ ரெயில் பணிகள் தற்போது தொடங்கி உள்ளதால் அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கடந்த வாரம் சனிக்கிழமை முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வாரம் சோதனை ஓட்டம் செய்யபட்டது. பொதுமக்கள் அதற்கேற்ப பழகிக்கொள்வதற்காக செய்யப்பட்ட சோதனை ஓட்டத்தில் சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர். ஆனால் ஓரிரு நாட்களில் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது.



போக்குவரத்து மாற்றங்கள்


தண்டபாணி தெரு, நந்தனம்-பனகல் பார்க் வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தியாகராய நகர் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியுடன் பள்ளிகளும் நிறைந்த பகுதியாக உள்ளது. அங்கேயே அடிக்கடி செல்லும் மக்கள் ஓரிரு நாட்களில் பழகிக்கொண்டார்கள். ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வபோது வரும் மக்கள் ஆரம்பத்தில் தடுமாறுகிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்: BCCI: இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம் - பி.சி.சி.ஐ. அதிரடி...! என்ன காரணம்..?


போக்குவரத்து நெரிசல்


போக்குவரத்து மாற்றத்தால் வெங்கடநாராயணா ரோடு, தியாகராயரோடு, பிரகாசம் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் கடந்த வாரம் ஏற்பட்டது. அந்த சாலையை கடக்க வழக்கமான நேரத்தைவிட கூடுதலாக 20 முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் தியாகராய ரோடு முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்களை நிறுத்தவும், பொதுமக்களை ஏற்றி, இறக்கிவிட்டு செல்லவும் அங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் போக்குவரத்து காவல்துறையினர் இந்த வழக்கத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.



வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு


இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், தி நகரில் பனகல் பார்க் மற்றும் வி.என். சாலை பகுதிகளில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, நவம்பர் 12ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் இவை செயல்படுத்தப்பட்டன. போக்குவரத்து மாற்றப் பாதையின் ஒரு வார செயல்திறன் சிறப்பான பலனைத் தந்துள்ளதால், சென்னை மெட்ரோ ரெயிலின் கோரிக்கையின்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே, போக்குவரத்து மாற்றங்களைக் கவனிப்பதில் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பையும் நீட்டிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்!" என்று குறிப்பிட்டுள்ளது.