சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக காவல்துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்துள்ளது. 


அதன் ஒரு பகுதியாக பெசன்ட் நகர் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வர உள்ளது. அதன்படி திரு.வி.க பாலம் மற்றும் சர்தார் பட்டேல் சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாது. அதற்கு மாறாக எல்.பி சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும். 


மேலும் 7வது நிழற்சாலை மற்றும் எம்.ஜி ரோடு சாலை வழியாக வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்ல முடியாது. எம்.எல் பூங்காவிலிருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்.பி ரோடு, பெசன்ட் நகர் முதல் சாலை வழியாக செல்ல முடியும். பெசன் ட் நகரிலிருந்து திருவான்மையூர் மற்றும் அடையாறு சிக்னல் செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்.பி சாலை வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. 


ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து மாற்றம்:


ஏற்கெனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் பெசன்ட் நகர் பகுதியில்  “கார் ஃப்ரீ “ என்ற முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெசன்ட் நகர் பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கார்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது.


 






பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்:


சென்னை அடுத்து உள்ள பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 4-5-2022 முதல் 3-9-2022 வரையில் பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறையில் இருந்தது. இந்தப் போக்குவரத்து மாற்றம் தற்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக ஆவடி மாநகர காவல்துறை ஆணையரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் சில சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள்  பணியினை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: மெட்ரோ பணிகள் : 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகள் தெரிந்துகொள்ளவேண்டியவை