India Hyperloop Test Track Chennai: போக்குவரத்தில் புரட்சி செய்ய உள்ள ஹைப்பர் லூப் தொடர்பான ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டு வருகிறது. 

போக்குவரத்து தேவைகள்:

மனிதன் நாகரிகம் வளர்ந்த காலத்தில் இருந்தே, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தொடர்ந்து புதுப்புது போக்குவரத்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறான். அந்த வகையில் தற்போது சாலை, ரயில்வே மற்றும் விமான போக்குவரத்துக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதிலும் எவ்வளவு வேகமாக ஓர் இடத்தில் இருந்து, அடுத்த இடத்திற்கு செல்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன என்பது குறித்து கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 

ஹைப்பர் லூப் என்றால் என்ன?- Hyper Loop 

அந்த வகையில் எதிர்காலத் தொழில்நுட்பம் என்பது ஹைப்பர் லுப் என்ற போக்குவரத்து முறை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஹைப்பர் லூப் என்பது நீண்ட தூரத்திற்கு இடையே அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய எதிர்கால போக்குவரத்து முறையாக உள்ளது. ஹைப்பர்லூப் என்பது ஒரு அதிவேக போக்குவரத்து அமைப்பு ஆகும். இது ஒரு தாழ்வான அழுத்தக் குழாயின் மூலம் பயணிக்கும் காப்ஸ்யூல்களைப் பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் நிலம் வழியாக விமானத்தை விட வேகமாக பயணிக்க முடியும்.

ஹைப்பர் லூப் சிறப்பம்சங்கள் என்ன ?

இதுகுறைந்த அழுத்த குழாய்கள் வழியாக காந்த சக்தியின் உதவியுடன் பயணிகளை மற்றும் சரக்குகளை வேகமாக கொண்டு செல்லும் தொழில்நுட்பம் ஆகும். இது நிலத்திற்கு மேல் அல்லது நிலத்தடி சுரங்கப்பாதைகளில் நிறுவப்படலாம். ஹைப்பர் லூப் காந்த விலக்கு மற்றும் குறைந்த உராய்வு மூலம் மணிக்கு 1,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும்.

ஹைப்பர் லூப் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும். இது மற்ற போக்குவரத்து முறைகளை விட குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இது குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த முறைப்படி ஒரு நேரத்தில் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும், இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் குறைவாக இருக்கும்.

சென்னை ஐஐடி சாதனை:

ஹைப்பர் லூப் ரயில்களை இயக்குவதற்கு இந்தியாவில் முதல் சோதனை தடத்தை சென்னை ஐ.ஐ.டி தயார் செய்துள்ளது. விரைவில் இதில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐ.ஐ.டி, இந்திய ரயில்வே அமைச்சகத்தில் நிதி உதவியுடன் ஹைப்பர் லூப் ரயில்களை இயக்குவதற்கு பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள தையூர் பகுதியில், அதன் வளாகத்தில் 42 மீட்டர் நீளத்திற்கு ஹைப்பர் லூப் ரயில்களை இயக்குவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் இயக்குவதற்கான சோதனை தடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை தடத்தில், ஹைப்பர் லுப் ரயில் சோதிக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக இதுவரை இரண்டு கட்டங்களாக 8.72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது கட்டமாக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக 350 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 30 நிமிடத்தில் அணைந்து விடலாம். எதிர்கால போக்குவரத்து மேம்படுத்துவதற்காக இந்த திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. 

சென்னை டூ திருச்சி 30 நிமிடத்தில் 

இந்த திட்டத்தின் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு 30 நிமிடத்திலும், சென்னையிலிருந்து மதுரைக்கு 45 நிமிடத்திலும் சென்றுவிடலாம்.