கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை, அதன் தொடர்பான செய்திகளில் அடிக்கடி வெளியாகிவருகிறது. ஒரு காலத்தில் கஞ்சாவின் தாக்கத்தால் குற்ற செயல்கள் அதிகரித்து வந்த வேளையில், தற்போது போதை மாத்திரை, ஊசி போன்ற வாயில் வராத பெயர்களில் பல போதைப்பொருள்களின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள்தான் இந்த மாதிரியான போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர் என்று நினைத்து கொண்டிருக்க, இந்த வரிசையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் நாம் பரவலாக பார்க்க முடிகிறது.
இந்தநிலையில், சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிகவளாகத்திற்கு தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்கு ஏசி வசதியுடன் உள்ள 3 பார்களில் இரவு நேரங்களில் மதுவிருந்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி பிரேசில் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற மந்த்திரா கோமரா என்பவரின் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் விடியவிடிய மது விருந்து நிகழ்ச்சி இங்குள்ள பாரில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் பிரவீன் அதிக மதுபோதையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பார் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வணிக வளாகம் அருகே ஒரு வாலிபர் போதை மாத்திரை விற்பதாக திருமங்கலம் காவல்துறையினருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் சிவபிரசாத், திருமங்கலம் உதவி ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் காவல்துறையினர் மேற்கண்ட பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை, பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் போதை மாத்திரைகைள் இருந்தன. உடனே அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அயனாவரத்தை 28 வயதான சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பதும், இவர் கோட்டூர்புரத்தை சேர்ந்த 21 வயதான அப்துல்ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த 24 வயதான இளம் பெண் டோக்கஸ் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை, போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
மேலும் விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் வந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, பல லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் கைதான இளம் பெண் டோக்கஸ், அடையாறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்