ரயிலின் மேல் தொங்கிக்கொண்டு ஹீரோயிசம் செய்தபடியே சென்ற கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவளங்காட்டை அடுத்த ஓரத்தூரைச் சேர்ந்தவர் நீதி தேவன். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு ரயிலில் தினமும் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த மே 25ம் தேதி கல்லூரி முடிந்த நீதிதேவன், வீட்டிற்கு வழக்கம் போல ரயிலில் சென்றுள்ளார். ரயில் வேப்பம்பட்டு அருகே சென்றபோது ரயில் படிக்கட்டு அருகே நின்றபோது அவரது கை வழுக்கி ரயிலில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. தவறி விழுந்த நீதிதேவன் படுகாயமடைந்தார். அவரது கால்கள் துண்டாகியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தியதோடு படுகாயமடைந்த நீதி தேவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
படியில் நின்றுகொண்டிருந்தபோது கை வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்தார் என்று கூறப்பட்ட நிலையில், நீதி தேவனும் அவரது நண்பர்களும் ரயிலில் தொங்கிய படி சாகசங்கள் செய்துகொண்டு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மாஸா மரணம் காட்டி மேல வந்தேன் டாப்புல ஊரயே அலறவுடுவான் என்ற பல்லாவரம் கானா ஹரியின் பாடலுக்கு டிக்டாக் செய்யும் மாணவர்கள் ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி அபாயமான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தான் ரயிலில் இருந்து தவறி விழுந்த நீதிதேவன் கால்கள் துண்டாகி உயிரிழந்துள்ளார். மாநிலக் கல்லூரி, பச்சையப்பாஸ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் இப்படி தினந்தோறும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. மாணவர்கள் தான் இப்படி அபாய பயணங்களை செய்துவந்த நிலையில் சமீபத்தில் மாணவிகளும் அபாயமுறையில் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக மாணவர்களுக்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கடுமையாக எச்சரிந்த நிலையில், மாணவர்கள் யார் பேச்சையும் மதிக்காமல் இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்காத வரை இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்