சென்னை அண்ணா சாலையில் மழை காரணமாக ஏற்பட்ட பள்ளத்தின் காரணமாக இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அருகில் வந்துக் கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தில் அவர் சிக்கிக்கொண்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


 ஐடியில் பணியாற்றும் 32 வயதான முகம்மது யூனுஸ் என்ற இளைஞர் சைதாப்பேட்டை அருகே சின்னமலைப் பகுதியில் காலை இரு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டுவந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் குழி இருந்துள்ளது. அவர் வந்த வேகத்தில் பேலன்ஸ் செய்ய முடியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு இடதுபுறமாக வேகமாக வந்துக் கோண்டிருந்த பேருந்தின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. அதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. 






விபத்து நிகழ்ந்தபோது அந்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருந்தார். பின்னர் வெளியான தகவல்களின்படி அந்த இளைஞர் சென்னை பெசண்ட் நகரிலிருந்து வடபழனிக்கு சின்னமலை வழியாகச் சென்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 


விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். முகம்மது யூனுசின் உடல் கைப்பற்றப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 


இதற்கிடையில், பேருந்தை ஓட்டி வந்த அரசு மாநகரப் பேருந்தின் ஓட்டுநர் தேவராஜா கைது செய்யப்பட்டார். மேலும் அவர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ்  கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் வேகமான வாகனம் ஓட்டுதல் ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார்.


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக  சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்திலும் மழை பெய்து கொண்டிருந்தது. விபத்து நடந்த சாலையை பராமரிக்கும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இளைஞர் உயிரிழந்ததையடுத்து, பள்ளத்தில் மணலை நிரப்பி சீர் செய்தனர்.