சென்னை அடுத்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, வருபவர் ரமாபிரபா. இவர் கடந்த 16 ஆம் தேதி வீட்டிற்கு சென்ற போது, குரோம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார். இதனை அடுத்து தனக்கு விபத்து ஏற்பட்டது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணிக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

 



 

தனது சக காவலரான உதவி ஆய்வாளர் ரமாபிரபா விபத்தில் சிக்கியது தொடர்பாக தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்த பின் தலைமை காவலர் ஷீலா ஜெபமணி (51) உடனடியாக அவரை பார்த்து உதவி செய்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர் தாம்பரம் பகுதியில் இருந்து குரோம்பேட்டை சென்று கொண்டிருந்த பொழுது,  செல்லும் வழியில் பாலாஜி பவன் உணவகம் அருகே, பின்னால் வந்த கார் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சக்தியை (41), குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சக பெண் காவலருக்கு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து உதவி செய்ய சென்ற, பெண் காவலர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.