பொங்கல் விடுமுறை
சென்னை மப்பேடு பகுதியில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜ், இவர், பொங்கல் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக குடும்பத்துடன் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். அப்போது, இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர். பின்னர், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். அப்போது, அவரது மகள் ஜோஸ்னா (8) என்ற சிறுமி திடீரென அறையின் கதவை திறந்து வெளியே சென்று, அங்குள்ள தனியார் நீச்சல் குளம் அருகே ஜாலியாக விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுமி தவறி விழுந்து, மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கு, அருகில் இருந்த சிலர் நீச்சல் குளத்தில் குதித்து சிறுமியை மீட்டு, அறையில் தங்கியிருந்த அவளது பொற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
உடனடியாக, சிறுமியின் தந்தை பிரேம் எட்வின் ராஜ் ஓடி வந்து மயக்க நிலையில் காணப்பட்ட மகளை ஆம்புலன்ஸ் மூலம், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து சிறுமி ஜோஸ்னாவை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
" சோகத்தை ஏற்படுத்தி உள்ளது"
விசாரணையில், உயிரிழந்த சிறுமி ஜோஸ்னா மப்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருவதும், தனியார் விடுதியில் பணியாற்றும் காவலரின் கவன குறைவால் சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் விடுதி காவலர் அனுபுரம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரம் (39) என்பவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மாமல்லபுரத்துக்கு, சுற்றுலா வந்து நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்