தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, நான்கு நாட்கள் வெகு விமர்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. போகி அதற்கு அடுத்த நாள், தைப்பொங்கல், அதற்கடுத்த நாள் மாட்டுப்பொங்கல், நேற்று காணும் பொங்கல் என விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சென்னையில் பிழைப்பிற்காக, வட தமிழ்நாட்டு மற்றும் தென் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

 



இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊரை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை படை எடுக்கத் துவங்கினர். திண்டிவனம், விழுப்புரம் ,மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றனர். இதன் காரணமாக சென்னையில், வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து எதுவும் இன்றி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

 



இந்தநிலையில் , விடுமுறை தினம் முடிந்துள்ளதால் மீண்டும் சென்னை நோக்கி மக்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்பதால் நேற்று நள்ளிரவு முதலே சென்னை நோக்கி பொதுமக்கள் வரத் துவங்கியுள்ளனர். இதன் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகளிலும், சென்னை உட்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆத்தூர் சுங்கச்சாவடி , பரனூர் , சுங்கச்சாவடி, தாம்பரம் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் போக்குவரத்து நெரித்தலை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசல் குறையும் வரை இலவசமாக மக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு வாகனங்கள் வேகமாக அனுப்பப்பட்டு வருகிறது.