தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளான செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வரை 86.39 சதவீதம் நீர் இருப்பும், புழல் ஏரியில் 90.06 சதவீதம் நீர் இருப்பும் உள்ளது. இதுதவிர பூண்டி ஏரியில் 48.96 சதவீதம் நீர் இருப்பும், சோழவரம் ஏரியில் 11.93 சதவீதம் நீர் இருப்பும் உள்ளது. இந்த நான்கு நீர்நிலைகள் தவிர சென்னைக்கு மற்ற குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. வீராணம் ஏரியில் 57.23 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.




இதனால், சென்னையின் குடிநீர் தேவையானது தற்போது நல்ல சூழலிலே உள்ளது.   சென்னைக்கு குடிநீர் வழங்கும் மேற்கண்ட நீர்நிலைகளின் மொத்த கொள்ளவுது 13. 22 டி.எம்.சி. ஆகும். அதாவது, 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 9.17 டி.எம்.சி. அதாவது 9 ஆயிரத்து 170 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டால் நிச்சயம் நீர்மட்டம் அதிகரிக்க கூடும். அப்போது, மற்ற நீர்நிலைகளும் முழு கொள்ளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மாதந்தோறும் 1 டி.எம்.சி. நீர் இருப்பு விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது 9.17 டி.எம்.சி. நீர் இருப்பு கையிருப்பில் உள்ளதால் அடுத்த 9 மாதங்களுக்கு சென்னையில் குடிநீர் விநியோகத்திற்கு எந்த பஞ்சமும் கிடையாது என்று உறுதியுடன் நம்பலாம்.




தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஏரிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், போதுமான அளவு நீர் இருப்பு இருப்பதாலும் நீர் இருப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து நீர் வரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண