பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 


தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001- 2002ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.


பின்பு, 2005- 2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. 


பட்ஜெட்டில் ரூ.162 கோடி ஒதுக்கீடு


2022- 23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


குறிப்பாக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், 15 மாவட்டங்களில் மாதிரிப்பள்ளிகள், மாவட்ட மத்திய நூலகங்கள் உள்ளிட்ட திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் அறிவிப்பில், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 2022-23ஆம் கல்வியாண்டில் 6.35 லட்சம் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.323.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்துக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


அடர் நீல நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ள சைக்கிள்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண