வாகன சோதனையில் போலீசார்
சென்னை கொடுங்கையூர் முல்லை நகரில் இன்று அதிகாலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 4.32 மணி அளவில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த இரண்டு நபர்களில் ஓட்டுநர் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை இறக்கி விசாரித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
அதி வேகமாக சென்ற கார்
இந்த தகவலை அங்கு பணியில் இருந்த காவலர் நாதமுனி என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனடியாக இந்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்போது முல்லை நகர் வியாசர்பாடி மெயின் ரோட்டில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரின் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தி கிடைத்தவுடன் அந்த வழியாக தப்பி வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரை அடையாளம் கண்டு நிறுத்திய போது அந்த கார் நிற்காமல் அதிவேகமாக கடந்து சென்றுள்ளது.
அதிவேகமாகச் சென்ற காரை பின் தொடர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அந்த வாகனம் வியாசர்பாடியில் உள்ள உள்ள பாழடைந்த பி.எஸ்.என்.எல் குடியிருப்பு வளாகத்தின் உள் பக்கமாக வேகமாக சென்று அதிகாலை 4.50 மணியளவில் நின்றுள்ளது.
துப்பாக்கியால் சுடாதே - எச்சரித்த போலீசார்
அப்போது காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது குழுவினர் காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்ற போது அந்த காரில் இருந்து இறங்கிய நபர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கையில் வைத்திருந்த கை துப்பாக்கியால் காவல் ஆய்வாளர் சரவணனை நோக்கி சுட்டு உள்ளார். காரை சுட்டதில் போலீஸ் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் சுடாதே என்று எச்சரித்தும் அந்த நபர் அதனை கேட்காமல் இரண்டாவது முறையாக மீண்டும் சுட்டதில் போலீஸ் வாகனத்தின் இடது பக்க முன்பக்க கதவில் பட்டுள்ளது. அதன் காரணமாக காவல் ஆய்வாளர் அவர் வைத்திருந்த கை துப்பாக்கியால் தன்னையும் தன்னோடு இருந்த சக காவலர்களையும் காப்பாற்றும் நோக்கத்தில் தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு ரவுண்ட் அந்த நபர் மீது சுட்டு உள்ளார். உடனே அந்த நபர் இரத்த வெள்ளத்தில் விழுந்ததால் அந்த நபரின் உயிரை உடனடியாக காப்பாற்றும் பொருட்டு காவல் ஆய்வாளர் சரவணன் அவரை காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பிறகு விசாரணையில் அந்த காரை சோதனை செய்ததில் அதில் 10 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் வீச்சருவாள் இருந்தது தெரியவந்துள்ளது.விசாரணையில் இறந்த நபர் ராமலிங்கம் என்பவரின் மகன் காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. இவர் மீது 59 வழக்குகள் உள்ளது, அதில் ஆறு கொலை வழக்குகளும், 17 கொலை முயற்சி வழக்குகளும், ஒரு கஞ்சா வழக்கும் மற்றும் 34 இதர வழக்குகளும் உள்ளது..ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்.
காவல்துறையினர் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, உடன் வந்தவர் சத்தியமூர்த்தி அவரை பற்றி விசாரிக்க வேண்டும், இன்ஸ்பெக்டர் சுடும் வரை காக்கா தோப்பு பாலாஜி என்று போலீசுக்கு தெரியாது, அவர் தொலைபேசி வைத்து இல்லை. சம்போ செந்தில் தொடர்பாகவும் ஆட்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லை, சூழ்நிலையை பொறுத்தே துப்பாக்கி சூடு நடந்தது, முன்கூட்டிய காக்கா தோப்பு பாலாஜி குறித்த கண்காணிப்பு இல்லை, துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிடுதல் இல்லை, ரவுடிகளிடம் துப்பாக்கி இருப்பது கண்காணிக்கபடும் என்றார்.
காவல்துறையினர் சோதனையில் நிற்காமல் சென்ற காரை போலீசார் துரத்திச் சென்ற பொழுது காரை ஒட்டிச்சென்ற நபர் இரண்டு முறை காவல்துறையினரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்பிற்காக காவல்துறையினர் சுட்டதில் பிரபல ரவுடி உயிரிழந்த சம்பவம் சென்னையில் ரவுடிகள் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.