Chennai Rotary Club: 101 மகளிருக்கு ஓட்டுநர் பயிற்சியுடன் ஆட்டோக்களை வழங்கிய சென்னை ரோட்டரி சங்கம்

Chennai Rotary club: 101 தகுதியான பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை சென்னை ரோட்டரி சங்கமானது வழங்கியுள்ளது.

Continues below advertisement

சென்னை ரோட்டரி சங்கத்தின் கவர்னர் மஹாவீர் போத்ரா தலைமையில்,  பொருளாதாரத் தேவை உடைய தகுதியான பெண்களைக் கண்டறிந்து சென்னை ரோட்டரி கிளப் ஆஃப்  தியாகராயநகர், 101 பேருக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கியுள்ளது.

Continues below advertisement

101 பிங்க் ஆட்டோ:

இது தொடர்பாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுமார் 70 பிங்க் ஆட்டோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. வொயிட்பயர் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சென்னை ரோட்டரி சங்க  கவர்னருமான மஹாவீர் போத்ரா மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் சர்வதேச தலைவர் ரோட்டரியன் கல்யாண் பானர்ஜி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராயநகர், 101 பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்களை வழங்கியது மட்டுமில்லாமல், அவர்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்காக 5000 ரூபாயும் வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி உள்ளது என்றனர். 

மாதந்தோறும், ஆட்டோவையும், ஆர்.சி.புத்தகத்தையும் காண்பித்து பராமரிப்பு செலவுக்கான 5000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

100 பெண்களுக்கு பயிற்சியளிக்க திட்டம்:

கணவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த அல்லது கட்டாயம் பணிக்கு செல்லவேண்டிய தேவையுடைய பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளித்து ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது எனவும், பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டும் பெண்கள் தொடர்ந்து முன்னேற்றம் காணும் நோக்கத்தில் ஓராண்டுக்கு மாதாந்திர பராமரிப்பு செலவும் வழங்கப்படுவதால் 100 க்கும் மேற்பட்ட பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

மேலும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, அவர்களை தனியாக அடையாளப்படுத்தும் வகையில் ஓவர் கோட் - ம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 101 பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  நடப்பு ஆண்டில் புதிதாக 100 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு  பிங்க் ஆட்டோ வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என மஹாவீர் போத்ரா தெரிவித்துள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் - திருப்பதி பயணம்: 

மஹாவீர் போத்ரா, நேற்றைய தினம் சென்னை ரோட்டரி சங்க கவர்னராக பொறுப்பேற்ற நிலையில், மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகள்  1500 பேரை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி திருப்பதி அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளதகவும் தெரிவித்துள்ளார். இதற்கென ஒரு ரயிலின் அனைத்து பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்து, காப்பகத்தில் இருந்து திருப்பதி அழைத்துச் சென்று மீண்டும் காப்பகத்தில் பத்திரமாக திரும்ப சேர்க்கும் வரையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். 

கண் பரிசோதனை முகாம்கள்

 இந்நிகழ்ச்சியில் ஆட்டோக்களை வழங்கிய சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராயநகர் சார்பில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கண் பரிசோதனை முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.  மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 100 க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளன. போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும்   சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஹார்ட் ஸ்கிரீனிங் பஸ் & மம்மோ பஸ் உள்ளிட்ட சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள்  வழங்கப்பட்டுள்ளன. இது போன்று பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை, சேவை மனப்பான்மையுடன் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் தியாகராய நகர் திறம்பட செய்து வருகிறது

Continues below advertisement
Sponsored Links by Taboola