கனமழை நேரங்களில், விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதால், பயணிகள் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்பாடு நேரங்களை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ள அறிவுறுத்தல்.


சென்னை விமான நிலையம் 


சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம், அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும், வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து, ஆலோசனை நடத்தி வருகின்றனர். 


பயணிகள் கூட்டம் குறைவு


சென்னை விமான நிலையத்தில் இன்று இரண்டாவது நாளாக, இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.


ரத்து செய்யப்பட்ட விமானங்கள்


இதனால் சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும், 4 வருகை விமானங்களும், மொத்தம் 8 விமானங்கள் இதுவரையில், ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளன.






பெங்களூரில் இருந்து இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், பகல் ஒரு மணிக்கு, அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.20 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


அதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.40 மணிக்கு, பெங்களூர் செல்ல வேண்டிய ஆகாஷா பயணிகள் விமானம், காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட் செல்ல வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.


வழக்கம் போல் இயங்கின


இந்த விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.


மழை முன்னெச்சரிக்கை என்ன ?


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது” இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில் , இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார். சென்னை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.