சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.


கடந்த காலத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் மழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வரும் நிலையில், அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர்  ககன்தீப்சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.


அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு பொது மக்களிடம் இருந்து வரும் புகார்களையும் அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களும் மேயரும் கேட்டறிந்தனர். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் நேரு, ”சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.


 






ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்த புகார்களையும் உதவிகளை கோரலாம். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்குவதற்கு ஏற்றார் போல் 163 தங்குமிடங்களும், உணவு, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அவர்களுக்கு ஏற்படுத்தி தர தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.


மேலும், ”சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்கள் களப்பணிகளை நேரில் ஒருங்கிணைத்து வருகின்றனர்.


மழைநீர் வடிகால் இல்லாத சில பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில்
மோட்டார் கொண்டு மழைநீர் வெளியேற்றப்படுகிறது. மழை தொடங்கியது முதல் இரவு, பகலாக சென்னை முழுவதும் 19,500 பணியாளர்கள் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” எனவும் அமைச்சர் நேரு தெரிவித்தார். 


அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”2015 மழை வெள்ளத்துக்குப் பிறகும் ஆட்சியில் இருந்தவர்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் நிரந்தர தீர்வு காண பணிகள் நடைபெற்று வருகிறது.


இதனால் தான் பல பகுதிகளில் இன்று மழைநீர் தேங்கவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்தார்.