சென்னையும் அதன் சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளங்களும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளாக மாறிப்போய்விட்டன. திடீர் திடீரென ஒடையுதாம், விழுகுதாம் என்பதுபோல சென்னை சாலைகளில் எங்கே, எப்போது பள்ளம், குழி ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்தில் பள்ளம் விழுந்து பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் அவதியுறச்செய்யும் நிகழ்வுகள் சென்னை சாலைகளுக்கும் அதன் மக்களுக்கும் ஒன்றும் புதிததல்ல






அண்ணா சாலையில் பள்ளம், எப்போதும் பரபரப்பாக இயக்கும் மத்திய கைலாஷ் சாலையில் பள்ளம் என அவ்வப்போது பதற வைக்கும் சென்னை சாலைகளில் சமீப நாட்களாக பள்ளங்கள் விழாமல் இருந்ததால், பாதசாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், இன்று காலை நகரின் முக்கிய பகுதியான தி.நகரை இணைக்கும் மேற்கு ‘மாம்பலம்’ பகுதியில் உள்ள பிருந்தாவன் தெருவில் காவல்துறையினர் நின்று போக்குவரத்தை சரி செய்யும் இடத்தில் திடீரென ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது மீண்டும் சென்னை வாசிகளை அதிர்ச்சியடை வைத்துள்ளது.



மேற்கு மாம்பலம் சந்திப்பு சாலையில் விழுந்த பெரும் பள்ளம்


பள்ளம் விழுந்தள்ள அந்த இடத்தில்தான் போக்குவரத்து போலீசார் தினந்தோறும் நின்று, அப்பகுதியில் வரும் வாகனங்களை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர். பள்ளம் விழுந்த நேரம் அதிகாலை என்பதால், அப்போது அங்கு யாரும் இல்லை, அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இப்படி அடிக்கடி ஸ்மார்ட் சிட்டி என சொல்லப்படும் சென்னையின் பிராதன சாலைகளில் பள்ளம் விழுவதும், விழுந்துகொண்டே இருப்பதும் பொதுமக்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. சாலைகள் போட காண்ட்ராக்ட் எடுக்க போட்டிபோடும் ஒப்பந்ததாரர்கள், அது கிடைத்த பிறகு காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பதால், ரோடு எப்படி போடப்படுகிறது என்பதை பார்க்க மறந்துவிடுகின்றனர்.






தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சாலைகள் இந்த நிலை என்றால் பிற ஊர்களில் சொல்லவா வேண்டும். அவ்வப்போது விழுவதும், உடைவதும், விபத்துகள் ஏற்படுத்துவதும் அன்றாட நிகழ்வுகளாக ஆகிவிட்டிருக்கின்றன.


கடந்த கால ஆட்சியை ‘கரப்ஷன், கமிஷன், கலக்‌ஷன்’ என சொல்லி விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர். இனியாவது, இதுபோன்று காசை மட்டுமே பார்க்கும் காண்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்காமல், கொஞ்சம் மக்களின் நலன்களையும் பார்த்து தரமான சாலைகளை போடும் நபர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கவேண்டும் என்பதே எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது