மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூபாய் 5800 கோடியில் 30 மாதத்திற்குள் பணிகளை முடிக்க உள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.


சென்னைத் துறைமுக ஆணையத் தலைவரும் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநருமான சுனில் பாலிவால் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் இதனைக் கூறினார்.


மேலும் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருட்களின் அளவு, வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவாக பேசினார். சென்னைத் துறைமுகம் நாட்டிலேயே அதிகளவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது என்றார். மேலும், காமராஜர் துறைமுகம் நாட்டிலேயே நவீன வசதிகள் உடைய துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதே வேளையில், செயலாக்கக் கட்டணம் மிகக் குறைவாக வசூலித்து நாட்டிலேயே முன்மாதிரியான துறைமுகமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


சென்னைத் துறைமுகம் 2021-2022ம் ஆண்டு நிதியாண்டில் 111 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாவும், காமராஜர் துறைமுகம் சுமார் 531.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.


மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை இரண்டு அடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது என்றும் அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.


மதுரவாயலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பறக்கும் மேம்பால சாலை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்


இந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னைத் துறைமுக ஆணைய துணைத் தலைவர் அருண்குமார், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் மா. அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.


நீண்ண்ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது மதுரவாயல் பைபாஸ் திட்டம். சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் சரக்கு வாகனங்கள் சென்னை நகருக்குள் வந்து எண்ணூருக்கு செல்வதில் அதிக சிரமம் ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் நகருக்குள் செல்வதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டது. நேரம் மாற்றம் காரணமாக வாகனங்கள் பலமணிநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் சரக்குகள் தேக்கமடைய ஆரம்பிக்க, எண்ணூருக்கு வரவேண்டிய சரக்குகள் கொச்சி, விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி, இறக்குமதி செய்யபயன்படுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய வருவாய் வேறு மாநிலங்களுக்குச் சென்றது. இதனை சரி செய்ய மதுரவாயல் முதல் எண்ணூர் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க 2010ல் கருணாநிதி தலைமையிலான அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் ஆரம்பித்தது.


2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு, கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பது உள்ளிட்ட, பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றது அதிமுக அரசு. இத்திட்டத்திற்காக போடப்பட்ட 110 தூண்கள் போஸ்டர் போர் நடத்துவதற்காக 500 கோடி ரூபாய் செலவில் அரசே அமைத்து கொடுத்த காஸ்ட்லி களமாகவும், காழ்ப்புணர்ச்சியின் அடையாளமாகவும் நின்றது. விளைவு, துறைமுகத்திற்குச் செல்ல சரக்கு வாகனங்கள் 4-5 நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இங்கு வரவேண்டிய சரக்குகள் காட்டுபள்ளி தனியார் துறைமுகம், ஆந்திராவில் உள்ள கிருஷ்ண பட்டினம் துறைமுகங்களுக்கும் செல்ல ஆரம்பித்தது. நம் துறைமுகங்களுக்கு வரவேண்டிய வருவாயும் போனது. துறைமுக விரிவாக்கப்பணிகளையும் கைவிட்டது துறைமுக நிர்வாகம்.

மதுரவாயல் பைபாஸ் திட்டம் தொடங்கப்படாவிட்டால் துறைமுகத்தை இழுத்து மூடவேண்டிய நிலைவரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் எச்சரித்திருந்தனர். ஆனாலும் பலன் இல்லை. 2016ல் ஜெயலலிதா இறந்த பிறகு முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், இந்த திட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தார். பழைய திட்டத்தில் மாற்றம் செய்து தருமாறு தேசிய நெடுஞ்சாலைக்கு கடிதம் எழுதியதில் திட்டம் மாற்றம் செய்யப்பட்டது. திட்ட மதிப்பீடும் ரூ.3100 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், மீண்டும் அந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் 4 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச்சாலையாகவும், ஓரடுக்கிற்கு பதிலாக ஈரடுக்கு மேம்பாலமாகவும் கட்டப்படும் என்று நிதின்கட்கரி கடந்த ஆண்டு அறிவித்தார். திட்ட மதிப்பும் ரூ.3,100 கோடியில் இருந்து ரூ.5000 கோடியாக உயர்த்தப்பட்டது. "சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவோம் என அறிவித்திருப்பது, அதன் கட்டுமானத்தைக் குலைத்து, அபரிமிதமான காலதாமதத்தை ஏற்படுத்தும், போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்" என்று தன் கண்டனத்தை பதிவு செய்திருந்தார் ஸ்டாலின். அதன்பிறகு திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் தான் ஆட்சிக்கு வந்திருக்கிற திமுக அரசு அதன் கனவுத் திட்டமான மதுரவாயல்-துறைமுகம் திட்டத்தை மீண்டும் தூசு தட்டியுள்ளது.