பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் (Gender and Policy Lab) மற்றும் அதற்கான பயிற்சி கருத்தரங்கினை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் பெண்கள் பாதுகாப்பாக சாலைகளில் பயணிக்க தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் 69 கோடி ரூபாய் செலவில் தெருவிளக்கு அமைக்கவும், 33 கோடி ரூபாய் செலவில் பொது இடங்களில் கழிப்பிடங்கள் அமைக்கவும், தேவைக்கேற்க  நடமாடும் கழிப்பிடங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.





அதனை அடுத்து, பெண் மாமன்ற உறுப்பினர்களின் அதிகாரத்தை அவர்களது கணவர்கள் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் பணி என்ன என்பது தெரியும். யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள்தான் அவரவர் பணியை செய்ய வேண்டும். வேறு யாரேனும் அப்பணியில் தலையிட்டால், அல்லது விதிமுறைகளை மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார். மேயரின் இந்த எச்சரிக்கையால் கவுன்சிலர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.