சென்னையில் மிகவும் புகழ் பெற்ற பகுதியாக விளங்குவது மெரினா கடற்கரை. விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, மெரினா கடலில் உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர் பொதுமக்களுக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் அன்பான வேண்டுகோள். இப்பகுதி கடல் ஆழமான பகுதி ஆகும். கடல் அலையின் வேகமும், சீற்றமும் வேகமாக உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் திடீர் சுழல் அலைகள் கடலில் இறங்கி விளையாடுபவர்கள் குளிப்பவர்களை உயிருடன் இழுத்துச் செல்கிறது. இளைஞர்கள் சிலரும், நீச்சல் அறிந்தவர்களும், நீச்சல் அறியாதவர்களும் கடலில் இறங்கி விளையாடி இன்னுயிரை இழந்துள்ளனர்.




குழந்தைகளை மகிழ்ச்சியாக இறங்கி விளையாட அனுமதிக்காதீர். பெற்றோர்களே, பொதுமக்களே எச்சரிக்கை. உயிர் போக வாய்ப்பு இருப்பதால்  அன்புச்செல்வங்களை இழக்காதீர்கள். அவசர அழைப்புக்கு 9498100024 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் கடலில் இறங்கி குளிக்கவோ விளையாடவோ வேண்டாம் என அன்புடன் எச்சரிக்கிறோம்.


காவல்துறை அறிவுரையை மீறி இறங்கி விளையாடும் குளிக்கும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். கடலில் இறங்காதீர்கள். அலையில் சிக்க உயிர் இழக்காதீர். கடல் அலையில் விளையாட்டு வேண்டாம் இளைஞர்களே அலைகளின் தாக்கம் கொடூரமானது.”


இவ்வாறு அவர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.




தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வருபவர்களுக்கும், சென்னை வாழ் மக்களுக்கும் முதன்மை சுற்றுலா தளமாக விளங்கும் மெரினா கடற்கரையில் இரண்டாம் அலையின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுமக்களை அனுமதித்த முதல் நாளிலே மூன்று மாணவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரும் ரோந்து வாகனங்களிலும், குதிரைகள் மீது அமர்ந்து கடற்கரைகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், சில சமயங்களில் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது. காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு அந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதன்மூலம் மெரினா கடலில் உயிரிழப்புகள் குறையும் என்று அப்பகுதியில் இருப்பவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.