சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய சாலையில் நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 3ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, அன்றைய தினத்தில் தலைமை காவலர்களின் காவலர்கள் வழக்கம்போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் நிறுத்துமாறு கை நீட்டியுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தாமல் காவலர் மீது மோதியுள்ளார். இதில், காவலர் அந்தரத்தில் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். இந்த விபத்தில் காவலர் பலத்த காயமடைந்தார். கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில் தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 






இந்த விபத்திற்கு காரணமான நபர்களை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, சம்பவம் நடந்த பகுதியில் ஒரு கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பரங்கிமலை புலன் ஆய்வு பிரிவு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். 



இந்தநிலையில், எஸ்ஐ பொன்ராஜ் தாக்கப்பட்ட வழக்கில் சுதர்சனம் என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுதர்சனம் அதிவேகமாக குடிபோதையில் ஆட்டோ ஓட்டியதாகவும், எஸ்ஐ நின்று வழிமறித்ததை தான் கவனிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனத்தை பரங்கிமலை புலன் ஆய்வு பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் ஓட்டிவந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக எஸ்ஐ பொன்ராஜை சந்தித்து அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண