விழுப்புரத்தில் உள்ள விளையாட்டு மைதானம், உள் அரங்குகள் பராமரிப்பு, நீச்சல் குளம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமலே, பணி செய்ததாக 27 லட்சத்து 71 ஆயிரம் ஊழல் செய்த விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் உட்பட மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளாமல் பணி செய்ததாக போலியாக கணக்கு காண்பித்து பணம் மோசடி செய்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடி எஸ் பி தேவநாதனுக்கு புகார்கள் வந்தன. இந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அப்போதைய விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிய ஞானசேகரன் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளரான ரகுநாதன் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலராக பணியாற்றிய மணிகண்டன் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானம், உள் அரங்குகள் பராமரிப்பு, நீச்சல் குளம் பராமரிப்பு, விளையாட்டு போட்டிகள் நடத்துதல், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு, விளையாட்டு பொருட்கள், சீருடைகள் வழங்குதல், தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலம் ஆட்களை வைத்து பணி செய்தல் இவ்வாறு பல்வேறு பணிகளை செய்யாமலேயே பணிகள் செய்ததாக போலியான ரசீதை அரசுக்கு அனுப்பி 27 லட்சத்து 71 ஆயிரத்து 771 ரூபாய் அரசு நிதியை கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஞானசேகரன், ரகுநாதன், மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஞானசேகரன் தற்போது சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியம் அலுவலராகவும், ரகுநாதன் விழுப்புரத்தில் ஊர்க்காவல் படை மண்டல தளபதியாகவும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 792 மற்றும் 2018-19 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 76 ஆயிரத்து 230 என மொத்தம் 18 லட்சத்து 90 ஆயிரத்து 22 ரூபாய்க்கான காசோலையை ஞானசேகரன், சட்டவிரோதமாக ரகுநாதனுக்கு வழங்கி உள்ளார். அந்த காசோலையை ரகுநாதன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் செலுத்தி பணத்தை பெற்றுள்ளார்.
இதில் 1 லட்சத்திற்கு 20 சதவீத தொகையை ரகுநாதனுக்கும், இதற்கு உதவி புரிந்த மணிகண்டனுக்கு 3 சதவீத தொகையையும் ஞானசேகரன் கமிஷனாக வழங்கியுள்ளார். இவ்வாறாக 3 பேரும் கூட்டுசேர்ந்து அரசு நிதியை கையாடல் செய்துள்ளனர். இதுதவிர பல்வேறு பணிகள் மூலமாக 8 லட்சத்து 81 ஆயிரத்து 700-ஐ ஞானசேகரன் மட்டும் தனியாக கையாடல் செய்துள்ளார். மொத்தமாக 27 லட்சத்து 71 ஆயிரத்து 771 ரூபாய் மூன்று பேரும் சேர்ந்து கையாடல் செய்துள்ளனர்.