Chennai: மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
ஆதிகாலம் முதல் அதிநவீன எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.
நூதன முறையில் மோசடி
பல்வேறு வகையில் ஹேக்கிங் செய்து வங்கி தகவல்களை திருடி பணத்தை நமக்கே தெரியாமல் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுரண்டுவது போன்ற புது புது வழிகளில் திருடர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மின்கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி மெசேஜ் செய்து அதன் மூலம் பணத்தை தேடி திருடுகின்றனர். இந்த மோசடி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
மின்சார கட்டணம் மோசடி
மின்சார கட்டணம் மோசடி தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, ஸ்மார்ட் போனில் வங்கி கணக்கு சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொத்த பணத்தையும் இழந்துவிடுவதாக கூறப்படுகிறது. மின்சார கட்டணம் மோசடியில் மொபைல் போன்களுக்கு உங்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாகவும் உடனே செலுத்துங்கள் என வாடிக்கையாளர்கள் எண்களுக்கு மெசேஜ் வரும். அதில் இணைப்பை கிளிக் செய்யுங்கள், மேலும் தகவல்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என அனுப்பப்படும்.
அந்த எஸ்எம்எஸ் ஒரு மோசடி என தெரியாமல் கிளிக் செய்த பலர் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வழங்கி மொத்த பணத்தையும் இழந்துள்ளார்கள். சிலர் சேவை எண் என்பதை தொடர்பு கொண்டு பணத்தை இழந்துள்ளார்கள். வங்கி கணக்கு விவரங்களை மின்சார வாரியம் கேட்கிறது என வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேச வைத்து பணம் மோசடி நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.
பொதுமக்களிடம் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான quick support அல்லது any desk போன்ற செயலிகள பதிவிறக்கம் செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை சைபர் குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். இந்த செயலிகள் மூலம் மக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்களை வைத்து மோசடி செய்கின்றனர். இதன் மூலம் வங்கி கணிக்கிலிருந்து பணத்தை திருடுவார்கள்.
எனவே மக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுபோன்ற குறுத்தகவலோ, அழைப்புகளோ மின்வாரியத்திலிருந்து வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.