சென்னை மாநகர காவல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐபிஎஸ் அதிகாரி, சங்கர் ஜிவாலை அவரது பிசியான ஷெட்டியூலுக்கு இடையே சந்தித்தோம். கேள்விகளை அடுக்குவதற்கு முன்பே நமக்கு தேநீர் கொடுத்து உபசரித்து, ஆரம்பிக்கலாமா என்றார் அவரது அழகு தமிழில்...!



இனி அவருடன் :-


கேள்வி : வணக்கம் சார், சென்னை காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு வர்றீங்க, அதற்கு முதலில் வாழ்த்துகள். சென்னை மாநகரை பொறுத்தவரை உங்கள் தலைமையில் காவல்துறை எப்படி இயங்குகிறது / என்னென்ன பிரிவுகள் சென்னை காவல்துறையில் உள்ளது ?


சங்கர் ஜிவால் : வணக்கம், சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையராக கடந்த 8.05.2021 அன்று பொறுப்பேற்றேன். எனது தலைமையில் சென்னை பெருநகர காவல்துறை சிறப்பாகவே இயங்கி வருகிறது. சென்னை காவல்துறையை பொறுத்தவரை எனது தலைமையில் சட்டம் ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, பாதுகாப்பு சென்னை காவல் பிரிவு, மதுவிலக்கு பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, ஆயுதப்படை, மோட்டார் வாகனப்பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.


கேள்வி : இந்த கொரோனா கால ஊரடங்கில் பொதுமக்களின் ஒத்துழைப்பு காவல்துறைக்கு எப்படி இருக்கிறது ? இன்னும் என்ன மாதிரியான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது ?


பதில் : பொதுவாக ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. சிலர் மட்டுமே தேவையின்றி கொரோனா விதிமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்டு பிரச்சினை செய்கின்றனர். அதிக பொறுமை காக்க வேண்டிய சூழ்நிலை இப்போது காவல்துறைக்கு உள்ளது. காவல் விதிகளுக்கு விலக்கு கேட்காமல், அனைவரும் சட்டத்தை பின்பற்றி நடந்தால், பிரச்சினை ஏற்படாமல் காவல்துறை இன்னும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கும்.


கேள்வி : காவல்துறை பணி அப்டிங்கிறது நேரம் காலம் கணக்கில்லாதது. இருந்தாலும், காவலர்களுக்கு ஓய்வு என்பது மிக முக்கியம். அப்படியிருக்கும்போது சென்னையில் போலீசாருக்கு ஒரு நாளுக்கு எத்தனை மணி நேரம் பணி கொடுக்கப்படுகிறது ? வார விடுமுறை உண்டா ? ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால் சென்னையில் பெரும்பாலும் போலீசார் டபுள் ஷிப்ட் பாக்குறதா சொல்றாங்க அதனால்தான்.


சங்கர் ஜிவால் : பொதுவாக காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையில் அனைவருக்கும் 8 மணி நேர பணி வகுக்கப்பட்டு, சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும், களப்பணியின்போது அதாவது குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போதோ, முக்கிய சட்டம் ஒழுங்கு பணிகளை சீர்செய்யும்போதோ இந்த சுழற்சி முறையில் சற்று மாற்றம் ஏற்படுத்தப்படும். மேலும், இவர்களுக்கு வார விடுமுறை உண்டு. விடுமுறை நாட்களில் பணி செய்யும்போது அதற்கான மிகைநேரப்படி வழங்கப்படுதால், போலீசார் தன்னார்வர்த்தோடு வேலை செய்கின்றனர். அதனால் அவர்கள் வார விடுப்பு எடுப்பதில்லை.


கேள்வி : பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது?


சங்கர் ஜிவால் : பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான புகார்கள் பெறப்பட்ட உடன் தாமதிக்காமல் விசாரித்து உடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு, பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியில் தெரியாமல் பாதுகாக்கவும்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் துரித நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றம் மூலம் நீதி பெறப்பட்டு தரப்படுகிறது.


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக,  அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் ரோந்து வாகனங்களின் மூலம் பெண்கள், குழந்தைகள் நல வாரியம் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இதுவரை 168 POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய குற்ற ஆவண காப்பக ஆய்வுகளின்படி இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் உள்ள சொர்க பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது


கேள்வி : அது மட்டுமில்லாமல், பெண் போலீசார் மீதான பாலியல் சீண்டல் புகார்களை விசாரிக்க என்ன மாதிரியான அமைப்பு இருக்கிறது. அது எப்படி சென்னை காவல்துறையில் செயல்படுகிறது ? 


சங்கர் ஜிவால் : பெண் போலீசார் மீதான பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை விசாரிக்க ‘விசாகா கமிட்டி’ அமைக்கப்பட்டுள்ளது. புகார்கள் பெறப்பட்ட உடனே விசாக கமிட்டி மூலம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டி-7 காவல் நிலைய காவலர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிட காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜூ மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கேள்வி : போலீசாருக்கென்றே தனியாக ஒரு மருத்துவமனை எழும்பூரில் இருக்கிறது. ஆனால், அது முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும், அப்படி ஒரு மருத்துவமனை இருக்கிறதா என்று கூட பலருக்கு தெரியவில்லை என கூறப்படுகிறதே..? 


சங்கர் ஜிவால் : காவலர்களுக்கான மருத்துவமனை, பல்நோக்கு மருத்துவமனைக்குரிய நவீன வசதிகளுடன், தனி கொரோனா தடுப்பு பிரிவோடு செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அங்கு சி.டி ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்கள் கூட செயல்பாட்டில்தான் இருக்கின்றன. மேலும், கொரோனா தடுப்பூசி மையம் இந்த மருத்துவமனையில் இயங்கி வருகிறது. 2020ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனையில் 67 நபர்கள் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்றனர். 1,95,764 நபர்கள் பிற நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டும் அதாவது 14 – 07 – 2021ஆம் தேதி வரை 27 பேருக்கு இங்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2021ஆம் ஆண்டில் இதுவரை 5,857 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


கேள்வி : சோஷியல் மீடியா அப்டிங்கிறது இப்போது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக ஆகிவிட்டது. சென்னையில் ஒவ்வொரு காவல்நிலையத்திற்கும் ஒரு சமூக வலைதள பக்கத்தை உருவாக்கி, அதில் புகார்களை தெரிவிக்க வைத்து நடவடிக்கை எடுக்க வைத்தால் இன்னும் சுலபமாக மக்கள் அணுகமுடியுமே ?


சங்கர் ஜிவால் : சென்னை பெருநகரில் ஒரு காவல் மாவட்டத்திற்கு ஒரு துணை ஆணையாளர் என மொத்தம் 12 காவல் மாவட்டங்களில் 12 துணை ஆணையர்கள் தலைமையில் சமூக வலைதள பிரிவுகள் இயங்கி வருகின்றன. அங்கு தனித்தனியே இங்கு வரும் கணினி வழிக்குற்றங்கள் மற்றும் சோஷியல் மீடியா குற்றங்கள் தொடர்பான புகார்களை பெற்று விசாரித்து, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கணினி வழி குற்றங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 8 காவலர்கலுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். மேலும், இக்குழுக்கள் மாநில கணினி வழி குற்ற தடுப்பு பிரிவுடன் இணைக்கப்படவுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவில், கணினி வழி குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவிற்கு மேலும் ஒரு துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்படவுள்ளார். அதேபோல், ஒவ்வொரு மண்டலத்திலும், புதிதாக 4 காவல்நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன.


கேள்வி : அதேபோல, பப்ளிக் சோஷியல் மீடியாவில் போலீசாரை தாக்கி போஸ்ட் பண்ற வீடியோக்கள் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. சென்னையில் போலீசாரே ஏன் வாகன சோதனை, விஐபி வருகை குறித்தெல்லாம் பேஸ்புக்கில் லைவ் செய்து அல்ரெட் செய்யக் கூடாது ? இப்படி செய்தால் அந்த சாலை வழியே வருபவர்கள் கூட வேறு வழியாக செல்ல வாய்ப்பிருக்கிறது அல்லவா ?


சங்கர் ஜிவால் : விஐபி வருகை விவரங்கள் பாதுகாப்பு காரணங்கள் கருதி மிகவும் ரகசியமாக வைக்கப்படவேண்டியவை. அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் உள்ளதால், சமூக வலைதளங்களில் இதனை வெளியிடும்போது, பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், போக்குவரத்து தொடர்பாக LIVE செய்து போடும்போது, அதே வீடியோவை மற்ற நெட்டிசன்கள், வேறொரு நாளுக்கு மாற்றி Circulate செய்து குழப்ப வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையற்ற சிரமத்திற்கு உள்ளாவார்கள்.


கேள்வி : இன்னும் அவசர உதவி என்றால் 100க்கு அழைப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இதனை தொழில்நுட்ப ரீதியாக எளிமைப்படுத்த ஏதும் திட்டம் இருக்கிறதா ? ஒரு தகவல் சொன்னால் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வர தாமதம் ஆகிறது என்ற புகார் இன்னும் இருக்கத் தானே இருக்கிறது ?


சங்கர் ஜிவால் : அவசர உதவி எண்ணுக்கு புகார்கள் வரும்போது, சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையானது சம்பவம் நடைபெறும் இடம் எந்த காவல்நிலைய எல்லையில் வருகிறதோ, அந்த காவல்நிலையத்திற்கு துரிதமாக தகவல் அனுப்பி, காவல் ரோந்து காவலர்கள் மூலமாக பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும், மேற்கொண்டு சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்கின்றனர். காவல் நிலையங்களில் ஒரு ஷிப்டுக்கு 25 காவலர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளாக பணிபுரிகின்றனர். எனவே காவலர்கள் சம்பவ இடத்திற்கு வர கால தாமதம் ஆக வாய்ப்புகள் மிகமிக குறைவு. அனைத்து ரோந்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி, பொருத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அவசர அழைப்பிற்கும் ரோந்து வாகனம் செல்லும் நேரம் கணக்கிடப்படுகிறது. அதனால், மேற்படி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் நேரத்தை கணக்கிட்டு, அதை குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். 2021ஆம் ஆண்டில் இதுவரை 1,55,649 அழைப்புகளுக்கு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர உதவி எண் 100 மூலம் வரும் எண்ணற்ற அழைப்புகளுக்கு ரோந்து வாகங்கள் சம்பந்தப்பட்ட இடங்களை உடனுக்குடன் சென்றடைகின்றன. அதோடு, பெண்கள் உதவி எண்ணும் மேற்படி அவசர அழைப்பிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.


கேள்வி : பொதுமக்களின் ஒத்துழைப்பை தவிர்த்துவிட்டு, காவல்துறை மட்டும் தனித்து இயங்கிவிடமுடியாது. அப்படி இருக்கும்போது பொதுமக்கள் – காவலர்கள் மோதலை தவிர்க்க போலீசாருக்கு ஏதும் பயிற்சிகள் வழங்கப்படுகிறதா ?


சங்கர் ஜிவால் : காவலர்கள் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு பணிச்சுமை மீட்பு (Welfare Training) மற்றும் நல்வாழ்வு பயிற்சி வகுப்புகள் (Well Being Training Classes) போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் பலவகையான வகுப்புகள் மற்றும் பயிற்சிகல் காவலர்களுக்கு வழங்கப்பட்டு, காவலர்கள் பொதுமக்களிடம் அமைதியாகவும், தன்மையாகவும் நடந்துகொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளனது. மேலும், இந்த இரண்டாவது ஊரடங்கு அமலில் இருந்தபோது காவல்துறையினர் மீது எந்த ஒரு புகாரும் வராமல் கனிவுடன் பணிபுரிந்தனர்.


கேள்வி : சென்னை காவல்துறையில் பணிபுரியும் 2008 பேட்ஜ் எஸ்.ஐக்களுக்கு 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதவி உயர்வு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே ?


சங்கர் ஜிவால் : பொதுவாக காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேரும் உதவி ஆய்வாளர்களுக்கு அதிகப்பட்சம் 10 ஆண்டுகளில் காவல் ஆய்வாளர் பதவி உயர்வு கிடைத்துவிடும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதானது 58ல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், காவல் உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு தாமதமாகியுள்ளது. ஆனால், 10 ஆண்டுகள் பணி நிறைவடையும் உதவி ஆய்வாளர்களுக்கு  Selection Grade Pay எனப்படும் ஆய்வாளருக்கு நிகரான  ஊதியம் வழங்கப்பட்டுவிடும். பதவி உயர்வு மட்டும் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவது தொடர்பாக மாநிலம் முழுவுஅதும் உள்ள காலி பணியிடங்களை அடிப்படையாக கொண்டு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில அளவிலான தரவரிசை பட்டியல் தயார் செய்து வருகிறார்கள். அதன்படி பதவி உயர்வு வழங்கப்பட்டுவிடும்.


கேள்வி : ஏகே விஸ்வநாதன் ஆணையராக இருந்தபோது ’மூன்றாவது கண்’ என்ற திட்டத்தின் மூலம் சென்னையின் பல இடங்களில் சிசிடிவியை பொறுத்தினார். இப்போது அந்த திட்டத்தின் நிலை என்ன ? இதனை நீங்களும் எடுத்துச் செய்யலாமே ?


சங்கர் ஜிவால் : சென்னை பெருநகரில் 1.4 லட்சத்திற்கும் மேலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி, கேமராக்கள் அனைத்தும் நல்லமுறையில் செயல்படுவதை உறுதிப்படுத்த ஒவ்வொரு காவல் நிலையம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இணையதளம் வழியாக சிம் கார்டு உதவியுடன் இயங்கும் கேமராக்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காவல் மண்டலத்திற்கும் ஒரு காவல் ஆய்வாளர் (டெக்னிக்கல்) நியமிக்கப்பட்டு அவர் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். காவல் இயக்குநரகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் சென்னையில் மேலும் 42,000 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


கேள்வி : எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை எப்படி நடந்தது ? கொள்ளையர்களை பிடிப்பதில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தன ?


சங்கர் ஜிவால் : எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்-களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள், பணம் வெளிவரும் இடத்தில் உள்ள மூடியை (Shutter) மூட விடாமல் கையால் சில நொடிகள் தடுத்து நிறுத்தி, அவர்கள் எடுத்த பணம் ஏடிஎம் உள்ளே திரும்ப சென்றதுபோல் பதிவு செய்ய வழிவகுத்து, பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். இவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். தி.நகர் மாவட்ட காவல்துணை ஆணையர் ஹரியானா சென்று 4 குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட பணம் நான்கரை லட்சம் மற்றும் 2 வாகனங்களை பறிமுதல் செய்தார். மேலும், வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 2 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. எதிரிகளை கைது செய்ய ஹரியானா மற்றும் இராஜஸ்தான் மாநில காவல்துறையினர் மிகவும் ஒத்துழ்ழைப்பு நல்கினர். இந்த வழக்கில் இன்னும் கைது நடவடிக்கை தொடரும்


கேள்வி : சென்னையில் ரவுடிகளை ஒடுக்குவதற்கு ஏதும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறதா ?


சங்கர் ஜிவால் : ஒவ்வொரு துணை ஆணையர் மேற்பார்வையில் காவல் ஆணையாளர் தலைமையில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு காவல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வருகின்றனர். மேலும்  மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கி வரும் ‘ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு’ ரவுடிகளின் நடவடிக்கைளை புலன் வைத்து கண்காணித்து சம்பந்தப்ட்ட காவல் அதிகாரிகளுக்கு முன்னறிப்பு அளித்து வருகிறது. இச்சிறப்பு அமைப்பின் மூலமாக பிரபல ரவுடிகளான சி.டி. மணி மற்றும் காக்க தோப்பு பாலாஜி உள்ளிட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து போக்கிரிகள் பற்றிய விபரம், குற்றங்களுக்கான நோக்கம் கூட்டாளிகள், எதிரிகள் மற்றும் அவர்களது நடவடிக்கை பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட்டு அதை கணினியில் பதிவு செய்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையில் ஒரு காவல் உதவி ஆணையர் குழு நியமிக்கப்பட்டு அந்தந்த மண்டலங்களில் ரவுடிகளுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகள், கைது நடவடிக்கை, வழக்கு விசாரணை, தலைமறைவு எதிரியை கைது செய்தல் ஆகிய பணிகள் கண்காணிக்கப்படுகிறது.


கேள்வி :  நீங்கள் டெல்லியில் வளர்ந்தவர். தமிழ்நாடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா..? உங்கள் மாநிலத்திற்கும் - தமிழ்நாட்டிற்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கின்றீர்கள் ?


சங்கர் ஜிவால் :  தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை பெருநகர மக்கள் பெரும்பான்மையினர் கல்வி அறிவு பெற்றிருப்பதால்,  சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட முயற்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை வாழ் பொதுமக்கள் பிரச்சினைகளை தவிர்த்து அமைதியை விரும்புபவர்களாக உள்ளனர். நான் டெல்லியில் பிறந்து, வளர்ந்து ,படித்திருந்தாலும், தமிழ்நாட்டில்தான் டெல்லியை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.


கேள்வி : சென்னை மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பது என்ன ?


சங்கர் ஜிவால் : பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்படும் நலத்திட்டங்கள் மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் சட்டங்களை மீறாமல் தடுக்கவும் காவல்துறையினர் அவர்களது பணியினை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இதனை, பொதுமக்களாகிய நீங்கள் உணர்ந்து, காவல்துறையினரை உங்கள் நண்பர்களாக பாவித்து, காவலர்கள் அனைவரும் பொதுமக்களான உங்களுக்கு சேவை செய்யவே பணியாற்றி வருகின்றனர் என்பதை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது பொதுமக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


நன்றி ; வணக்கம் !