சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23) இவர் ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து,வரும் பெண் தலைமை காவலரின் மகள் சந்தியா (20) , தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யாவை சந்தித்து சதீஷ் காதலிக்குமாறு தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தி நகர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் மதியம் 1:30 மணி அளவில், மாணவி சத்யாவை சதீஷ் சந்தித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். ரயிலில், சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சதீஷ் அங்கிருந்து பொதுமக்களை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
  



 

தனிப்படை அமைப்பு

 

இதனை அடுத்து தப்பி ஓடிய சதீஷை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசார் தலைமை நான்கு தனிப்படைகளும் மற்றும் காவல்துறை தலைமையில் மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. ஏழு தனிப்படைகளும் மாணவன் தப்பிச் சென்றபொழுது கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு தேடிவந்தனர். இதனை அடுத்து மாணவன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்துகொண்டுஅ இருந்த பொழுது சுற்றி வளைத்து சதீஷ் கைது செய்து மாம்பலம் பகுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விடிய விடிய விசாரண

 

கைது செய்த சதீஷிடம் விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆத்திரத்தில் இந்த கொலைச் சம்பவம் நடைபெறவில்லை எனவும், திட்டமிட்டே இந்த கொலை சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. கொலைக்கு பின் சதீஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாக தகவல் தெரிவித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.

 

தந்தை உயிரிழப்பு

 

மாணவி உயிரிழந்த சோகத்தால் மாரடைப்பு ஏற்பட்டு சைதாப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் தந்தை மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் மாணவி கொலை செய்யப்பட்டதால் தந்தை சோகத்தில் உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.