ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வரும் செப்டம்பர் 30-க்கு பிறகு செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
2 ஆயிரம் நோட்டுகள்
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வந்த பிறகு வங்கியை தவிர பிற இடங்களில் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றனர். டாஸ்மாக், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களில் ஊழியர்கள் வாங்க மறுத்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டால் அரங்கேறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு வழக்கம் போல் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது இரு சச்கர வாகனத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 2 ஆயிரம் ரூபாயை காட்டி , 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பெட்ரோலை உறிஞ்சி எடுத்த ஊழியர்:
ஊழியரும் பெட்ரோல் நிரப்பி விட்டு 2 ஆயிரம் ரூபாய்த் தாளை வாங்கி பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் பெண் சூப்பர்வைசரிடம் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். அதற்கு பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கக் கூடாது எனக் கூறியதுடன், வாடிக்கையாளரிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு பெட்ரோல் நிரப்பியவர், தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகள் இல்லை என்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க் சூப்பர்வைசருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் பெண் சூப்பர்வைசர், ஊழியரிடம் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுக்கும் படி கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர் தாங்கள் போட்ட 100 ரூபாய்க்கான பெட்ரோல உறிஞ்சு ஒரு கேனில் சேகரித்தார்.
வைரலாகும் வீடியோ:
பெட்ரோல் பங்க் ஊழியரின் இந்த செயலை கண்ட வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தின்போது பெட்ரோல் பங்க் சூப்பர்வைசர் பேசியதை வாடிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல இடங்களில் 2 ஆயிரம் நோட்டுகள் வாங்க மாட்டேன் என்று கூறிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Shocking Video: சுங்க கட்டணம் கட்டுவதில் தகராறு.. ஹாக்கி ஸ்டிக்கால் அடித்து கொல்லப்பட்ட ஊழியர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!
மேலும் படிக்க: Thiruvavaduthurai Atheenam: செங்கோல் குறித்து திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் தவறான பதிவு - மயிலாடுதுறை எஸ்.பி.யிடம் புகார்