காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழாவில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தரிசனம் செய்து வந்தனர் அந்த வகையில், வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.



திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே 3.45 மணி அளவில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும்  மேளதாளங்கள் முழங்க, கோவிலில் இருந்து ராஜநடையில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.



 

தேர் திருவிழாவை கண்டு  வரதரை தரிசிப்பதற்காக, காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் நாகலத்துமேடு பகுதியை சேர்ந்த, 60 வயது மதிக்கத்தக்க ராமமூர்த்தி என்ற முதியவர் தேர்த் திருவிழாவை காண வருகை தந்துள்ளார். காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் துணிக்கடைய அருகே நின்று கொண்டு தேர் திருவிழாவை பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த ராமமூர்த்தியை பார்த்த, பக்தர்கள் உடனடியாக அவரை மீட்டு காவல்துறையினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோதனை செய்ததில் ராமமூர்த்தி வரும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. தேர் திருவிழாவை காண வந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.