கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பெங்களூரு- மைசூரு விரைவு சாலையில் டோல்கேட் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள கரிகால் தாண்டியாவில் வசிக்கும் 26 வயதான பவன்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுங்கக்கட்டணம் செலுத்துவது மற்றும் கேட்டை ஓபன் செய்வதில் தாமதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டு கொலையில் முடிவடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
என்ன நடந்தது..?
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மைசூரு நோக்கி காரில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, டோல்கேட் அருகே, வந்தபோது, சுங்க கட்டணம் செலுத்துவர் தொடர்பாகவும், டோல்கேட் கேட் தாமதமாக திறந்தது தொடர்பாகவும் ஊழியர் பவன்குமார் மற்றும் காரில் இருந்த 4 பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேரமாக நீடித்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி டோல்கேட் ஊழியர்களும், காரில் இருந்த இளைஞர்களும் அடித்து மோதி கொண்டனர்.
தொடர்ந்து பவன்குமார் உள்பட சக ஊழியர்கள் மற்றும் காரில் வந்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, கேட்ட கட்டணத்தை கொடுத்துவிட்டு காரில் வந்தவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே பவன்குமார் சாப்பிடுவதற்காக சக ஊழியர் மஞ்சுநாத்துடன் சென்றுள்ளார். அப்போது, பவன்குமாருக்காக காத்திருந்த அந்த இளைஞர்கள் ஹாக்கி ஸ்டிக்கால் பவன்குமார் மற்றும் மஞ்சுநாத்தை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த சக ஊழியர் மஞ்சுநாத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பிடாதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.